தலைமறைவு குற்றவாளிகளை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவு
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க தலைமறைவு குற்றவாளிகளை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கூடுதல் நீதிபதி உத்தரவிட்டார்.
திருப்பத்தூர்
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க தலைமறைவு குற்றவாளிகளை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கூடுதல் நீதிபதி உத்தரவிட்டார்.
ஆலோசனை கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான ஆலோசனைக்கூட்டம் திருப்பத்தூர் நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கூடுதல் நீதிபதி மீனாகுமாரி தலைமை தாங்கினார். சார்பு நீதிபதி அசினாபானு, மாஜிஸ்திரேட்கள் பிரபு, செல்வம், பிரகாந்தா, ரவி, உரிமையியல் நீதிபதிகள் ராஜசேகர், விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி மீனாகுமாரி பேசியதாவது:-
மாவட்டத்தில் உள்ள அனைத்து குற்ற வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும். தலைமறைவு குற்றவாளிகளை உடனடியாக பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த வழக்குகளில் உடன் விசாரணை செய்ய சம்மன் அனுப்பி சாட்சிகளை கோர்ட்டில் ஆஜர் செய்ய வேண்டும். விசாரணை அதிகாரிகள் வெளியூரில் இருந்தாலும் வழக்கு நடக்கும் தேதிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும்
தவறும் பட்சத்தில் அவர்களின் மீது பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும். மாவட்டத்தில் குற்றவழக்குகள் ஏதும் தேங்காதவாறு போலீசார் விரைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் கணேசன், சுரேஷ்பாண்டியன், சரவணன், அரசு குற்றவியல் வழக்கறிஞர் பி.டி.சரவணன், கூடுதல் அரசு வழக்கறிஞர் எம்.சரவணன் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.