முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பணியாற்ற வாய்ப்பு

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பணியாற்ற மகளிர் சுய உதவிக்குழுவினர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-05-09 18:45 GMT


முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பணியாற்ற மகளிர் சுய உதவிக்குழுவினர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காலை உணவு திட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் பள்ளி குழந்தைகளுக்கு உணவு சமைக்கும் பணியினை மேற்கொள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களாக இருக்க வேண்டும். ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு பகுதி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக 3 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

ஆண்ட்ராய்டு போன்

பள்ளி இருக்கும் அதே ஊராட்சி, நகர்புற பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும். உணவை சமைப்பதற்கும், பரிமாறுவதற்கும் போதுமான அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தைகள் அதே பள்ளியில் படிக்க வேண்டும். 10-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் தங்கள் பெயரில் இணையவசதியுடன் கூடிய ஆண்ட்ராய்டு மொபைல் போன் வைத்திருக்க வேண்டும்.

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள்

தேர்வு செய்யப்படும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கடந்த 3 ஆண்டுகளில் பெற்ற கடன்களை தவணை தவறாது நிலுவையின்றி செலுத்தி இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தைகள் அந்த பள்ளியை விட்டு விலகினாலோ அல்லது 5-ம் வகுப்பில் இருந்து தேர்ச்சி பெற்று, 6-ம் வகுப்பு சென்றாலோ அவருக்கு பதிலாக புதிய உறுப்பினர் வழிகாட்டு நெறிமுறைகளின் படிதேர்வு செய்யப்படுவர்.

மேற்கண்ட தகுதிகளை உடைய மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஏதும் இல்லை என ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பு பகுதி அளவிலான கூட்டமைப்பு சான்றளிக்கும் பட்சத்தில் மட்டுமே வேறு ஊராட்சி, பேரூராட்சியை சேர்ந்த சுய உதவிக்குழு ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பு பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு உணவு தயாரிக்கும் பணி ஒதுக்கீடு செய்யப்படும்.

கடும் நடவடிக்கை

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் உணவு சமைக்கும் பணியானது முற்றிலும் தற்காலிக பணியாகும். இந்த பணிக்காக மதிப்பூதியம் மட்டுமே வழங்கப்படும். இந்த பணி நியமனத்தில் எவரேனும் தவறான செயலில் ஈடுபட்டது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்