தமிழ்நாட்டில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 தொடக்கம்: போலீஸ் சூப்பிரண்டுகள், கமிஷனர்களுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு

தமிழ்நாட்டில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 தொடங்கியது. இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டுகள், கமிஷனர்களுக்கு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-05-01 15:12 GMT

சென்னை,

போதை பொருட்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று தமிழக போலீஸ்துறைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் கடந்த 6.12.2021 முதல் 31.12.2022 வரை 3 கட்டங்களாக ஆபரேஷன் கஞ்சா வேட்டையை போலீசார் நடத்தினார்கள். இந்த நடவடிக்கையின் பலனாக தமிழகம் முழுவதும் 47 ஆயிரத்து 248 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா விற்பனை தொடர்பாக 20 ஆயிரத்து 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 ஆயிரத்து 721 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். இதில் 5 ஆயிரத்து 723 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

எனினும் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. இந்த நிலையில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 நடவடிக்கையை போலீசார் கையில் எடுத்துள்ளனர். நேற்று இந்த நடவடிக்கை தொடங்கியது. இன்று அதிகாலை தாம்பரம் போலீஸ் கமிஷனரக எல்லைக்குட்பட்ட குன்றத்தூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதில் ரூ. 1 கோடி மதிப்பிலான 22 டன் குட்கா புகையிலை பொருட்கள் சிக்கியது. இதனை கடத்தி வந்த 3 மினி லாரி, 4 மினி ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கடத்தலில் ஈடுபட்டவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் கமிஷனர்களுக்கு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.

கஞ்சா விற்பனை தொடர்பான தகவல் கிடைத்தால் 044-28447701என்ற தொலைபேசி எண் மூலமாகவும், tndgpcontrolroom@gmail.com என்ற இ-மெயில் மூலமாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும், தகவல் தெரிவிப்பவர்கள் விவரம் ரகசியம் காக்கப்பட்டு அவர்களுக்கு தக்க வெகுமதி வழங்கப்படும் என்றும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியுள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்