ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

Update: 2022-12-31 19:52 GMT

ஸ்ரீரங்கம்:

வைகுண்ட ஏகாதசி விழா

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கியது. தற்போது பகல் பத்து நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 4.45 மணிக்கு நடக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படாததால், கடந்த சில ஆண்டுகளாக சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கு பக்தர்கள் அதிக அளவில் வரவில்லை. இதனால் நாளை நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் நம்பெருமாளை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பந்தல் அலங்காரம்

இதன் காரணமாக பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கோவில் அதிகாரிகளும், போலீசாரும், மாவட்ட நிர்வாகத்தினரும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து செய்து வருகின்றனர். பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல வேண்டிய வழிகளை தடுப்பு கட்டைகள் அமைத்து வரைமுறைப்படுத்தி உள்ளனர்.

சொர்க்கவாசல் திறந்த பின் நம்பெருமாள் பரமபத வாசலை கடந்து ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். மேலும் ராப்பத்து நிகழ்ச்சியும் ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெறும். இதனால் ஆயிரங்கால் மண்டபம் முழுவதும் பல்வேறு வித வடிவமைப்புகளில் பந்தல் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மணல்வெளியிலும், நம்பெருமாள் வரும் வழியிலும் அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.

பாதுகாப்பு

பக்தர்கள் வரிசையில் நின்று கோவிலுக்குள் வரும் வழியில் மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை கோவில் வளாகம் மற்றும் வெளியில் நின்று பக்தர்கள் காணும் வகையில் எல்.இ.டி., எல்.சி.டி. டி.வி.க்கள் பொருத்தப்படுகின்றன. பக்தர்கள் கூட்டத்தை கண்காணிக்க 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புறக்காவல் நிலையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நாளை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால், திருச்சி மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

3,500 பேர் நியமனம்

இதற்காக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் தலைமையில், ஒரு டி.ஐ.ஜி, 14 போலீஸ் சூப்பிரண்டுகள், 20 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 40 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என 3,500 பேர் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். எந்தெந்த இடங்களில் போலீசார் பணியில் ஈடுபட வேண்டும் என்பது தொடர்பான பாதுகாப்பு திட்டத்தை மாநகர போலீஸ் அதிகாரிகள் ஏற்கனவே தயார் செய்துள்ளனர். அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

முத்துக்குறி அலங்காரம்

இந்தநிலையில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவத்தின் 9-ம் நாளான நேற்று காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி 7.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தை அடைந்தார். அப்போது, நம்பெருமாள் முத்து பாண்டியன் சாய் கொண்டை, முத்து கர்ண பத்ரம், முத்து அபயஹஸ்தம், மார்பில் நாச்சியார் - அழகிய மணவாளன் பதக்கம், வெள்ளைக்கல் ரங்கோன் அட்டிகை, 6 வட பெரிய முத்துச்சரம், முத்தங்கி அணிந்து முத்துக்குறி அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

பின்னர் காலை 7.45 மணி முதல் பகல் 12 மணி வரை 'தெள்ளியீர்' பாசுரங்களையும், மதியம் 1 மணி முதல் 3 மணி வரை முத்துக்குறி அலங்காரத்தில் 'மின்னுருவாய்' பாசுரங்களையும் அரையர்கள் நம்பெருமாள் முன்பு அபிநயத்துடன் இசைத்தனர். திருப்பாவாடை கோஷ்டி உபயதாரர்கள் மரியாதைக்கு பிறகு இரவு 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தை அடைந்தார்.

 சொர்க்கவாசல் திறப்பு

பகல்பத்து விழாவின் கடைசி நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். இதைத்தொடர்ந்து வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (திங்கட்கிழமை) காலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. இதற்காக உற்சவர் நம்பெருமாள் ரத்தினஅங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து நாளை அதிகாலை 3.30 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து சிம்மகதியில் புறப்பட்டு வெளியில் வருவார்.

தொடர்ந்து இரண்டாம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியாக மூன்றாம் பிரகாரத்திற்கு வரும் நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வருவார். முன்னதாக விரஜாநதி மண்டபத்தில் அவர் வேத விண்ணப்பம் கேட்டருளுவார். அதனைத் தொடர்ந்து காலை 4.45 மணியளவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படும்.

பக்தர்களுக்கு சேவை

அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை கடந்து மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு காலை 5 மணிக்கு வருவார். அங்கு நம்பெருமாள் சுமார் 1 மணி நேரம் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

அதன்பின் காலை 7 மணிக்கு சாதரா மரியாதையாகி, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் காலை 8 மணிக்கு எழுந்தருளுவார். காலை 9 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை பொதுஜன சேவையும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை அரையர் சேவையுடன், பொது ஜனசேவையும் நடைபெறும்.

திருமாமணிமண்டபத்தில் இருந்து நம்பெருமாள் நள்ளிரவு 12 மணியளவில் புறப்பட்டு மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1.15 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைவார். விழாவையொட்டி ஸ்ரீரங்கம் மற்றும் சுற்றுப்பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

நாளை உள்ளூர் விடுமுறை

வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு நாளை (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்