ஊட்டி சிறப்பு மலை ரெயில் அடுத்த மாதம் வரை நீட்டிப்பு

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஊட்டி சிறப்பு மலை ரெயில் சேவை ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-06-27 19:15 GMT

ஊட்டி

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஊட்டி சிறப்பு மலை ரெயில் சேவை ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மலை ரெயில்

மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கோடை சீசன், 2-வது சீசன் காலங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தரும்போது, ஆயிரக்கணக்கானோர் ஊட்டி மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

ரெயிலில் கூட்டம் அலைமோதுவதால், சிலருக்கு டிக்கெட் கிடைக்காமல் போவதால் ஏமாற்றம் அடைகின்றனர். இதையடுத்து கோடை சீசனின்போது சிறப்பு மலை ரெயிலை இயக்க சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதன்படி நீலகிரி சிறப்பு மலை ரெயில் சேவை கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி முதல் தொடங்கியது.

வருகை அதிகரிப்பு

இதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறப்பு மலை ரெயில் சனிக்கிழமை காலை 9.10 மணிக்கு புறப்பட்டு ஊட்டிக்கு 2.25 மணிக்கு வந்தடையும். இதேபோல் ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு மதியம் 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

இந்த ரெயில் சேவை வாரத்தில் வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை 4 நாட்கள் இயக்கப்பட்டது. இதில் முதல் வகுப்பு கட்டணமாக ரூ.630, 2-ம் வகுப்பு கட்டணமாக ரூ.465 வசூல் செய்யப்படுகிறது.

இந்தநிலையில் ஜூன் மாதம் 26-ந் தேதி வரை சிறப்பு மலை ரெயில் சேவை இருக்கும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அவர்கள் தற்போதும் மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் முன்பதிவும் அதிகளவில் இருந்து வருகிறது.

நீட்டிப்பு

இதனால் தற்போது சிறப்பு மலை ரயில் பயணத்தை வருகிற ஜூலை 30-ந் தேதி வரை ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்து சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. ஆனால், இந்த முறை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சனிக்கிழமையும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்