எருமைகள் மீது ஊட்டி மலை ரெயில் மோதி விபத்து
எருமைகள் மீது மோதியதில் ஊட்டி மலை ரெயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது.
ஊட்டி,
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரெயிலில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து 220 பயணிகளுடன் ஊட்டி நோக்கி மலை ரெயில் சென்று கொண்டிருந்தது. குன்னூர் ரெயில் நிலையத்தை தாண்டி, பர்ன்ஹில் பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் எருமைகள் நிற்பதை பார்த்த ரெயில் ஓட்டுநர் உடனடியாக பிரேக்கை அழுத்தியுள்ளார். இருப்பினும் ரெயில் எருமைகள் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இதில் ஒரு எருமை உயிரிழந்த நிலையில், மற்றொரு எருமை படுகாயமடைந்தது. மேலும் திடீரென பிரேக் அழுத்தியதால் ஏற்பட்ட உராய்வின் காரணமாக மலை ரெயிலின் ஒரு பெட்டி தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. ரெயில் தடம் புரண்டதை அறிந்த சுற்றுலா பயணிகள் அலறினர். இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ரெயில் பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ரெயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகளை பேருந்து மூலமாக ஊட்டிக்கு அனுப்பி வைத்தனர்.
ரெயில் விபத்து காரணமாக ஊட்டி-குன்னூர் இடையேயான மலை ரெயில் சேவை இன்று தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.