150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி: ஜல்லிக்கட்டு காளைகளை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் - மதுரை கலெக்டர் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு போட்டியை காண 150 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மதுரை கலெக்டர் அனிஷ்சேகர் அறிவித்துள்ளார்.

Update: 2023-01-07 20:41 GMT


ஜல்லிக்கட்டு போட்டியை காண 150 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மதுரை கலெக்டர் அனிஷ்சேகர் அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டி

மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை அவனியாபுரத்தில் 15-ந் தேதியும், 16-ந் தேதி பாலமேட்டிலும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டிகள், அரசால் பிறப்பிக்கப்பட்ட கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கை மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் நடத்தப்பட உள்ளது. ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள உள்ள மாடுபிடி வீரர்கள் www.madurai.nic.in என்ற இணையதளம் மூலம் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.

அதில் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், வயது சான்றிதழ், கொேரானா தடுப்பூசி சான்றிதழ் ஆகியவற்றை பதிவு செய்யவேண்டும். மேலும் மாடுபிடி வீரர்கள் அனைவரும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியில் இருந்த 2 நாட்களுக்குள் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றினை வைத்திருந்தால் மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்படுவர்.

150 பார்வையாளர்கள் அனுமதி

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது. எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசினால் வெளியிடப்படும் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி பார்வையாளர்கள், திறந்த வெளி அரங்கின் அளவிற்கேற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அதிகபட்சமாக 150 பார்வையாளர்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட இருக்கை எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இவற்றில் எது குறைவோ அந்த எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இணையத்தில் பதிவு

ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகளுக்கான பதிவுகளையும் www.madurai.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய மூன்று கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் ஏதாவது ஒரு கிராமத்தில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படும்.

ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள உள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அவர்கள் இருவரும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து இரண்டு நாட்களுக்குள் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றினை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இணையதளத்தில் பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டபின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும், அவ்வாறு டோக்கள் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

வெளியூர் மக்கள் வரவேண்டாம்

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பார்வை செய்யும் அனைத்துத்துறை அலுவலர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் என அனைவரும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வெளியூரில் வசிப்பவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வழியாக காண அறிவுறுத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்த அரசின் முன் அனுமதி பெற்று பிராணிகள் வதை தடுப்பு(ஜல்லிக்கட்டு நெறிமுறைகள்) விதிகள் 2017, அரசினால் வெளியிடப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றுடன் அரசினால் விதிக்கப்படும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்