ஆன்லைன் பகுதி நேர வேலைவாய்ப்பு மோசடி; 2 பேர் கைது
ஆன்லைன் பகுதி நேர வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
சென்னை மணலியை சேர்ந்த முகமது இலியாஸ் (வயது 38), அண்ணாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்த தமிழ்செல்வம் (44) ஆகிய 2 பேர் ஆன்லைனில் பகுதி நேர வேலைவாய்ப்பு என்று கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்தனர். இவர்களிடம் அடையார் பகுதியை சேர்ந்த ஒருவர் ரூ.12 லட்சத்து 22 ஆயிரத்தை இழந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அவர், சென்னை மத்திய குற்றப்பிரிவு 'சைபர் கிரைம்' போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது இலியாஸ், தமிழ்செல்வம் இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில் இவர்கள் போலி வங்கி கணக்கை தொடங்கி அதன் மூலம் மோசடி செய்த பணத்தை ஹாங்காங்கில் உள்ள ஒருவருக்கு அனுப்பி வந்தது தெரிய வந்தது. அந்த வங்கி கணக்கில் இருந்த ரூ.12 லட்சத்தை 'சைபர் கிரைம்' போலீசார் முடக்கினார்கள். இவர்களிடம் இருந்து 7 செல்போன்கள், ஒரு லேப்டாப், ஒரு தனியார் நிறுவனத்தின் போலி சீல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைதான 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.