கர்நாடக அரசு பஸ்சில் ஒரு டன் ராகி பறிமுதல்

ஊட்டியில் இருந்து மைசூருவுக்கு கர்நாடக அரசு பஸ்சில் கடத்த முயன்ற ஒரு டன் ராகி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-09-28 22:00 GMT

கூடலூர்

ஊட்டியில் இருந்து மைசூருவுக்கு கர்நாடக அரசு பஸ்சில் கடத்த முயன்ற ஒரு டன் ராகி பறிமுதல் செய்யப்பட்டது.

பஸ்சில் சோதனை

நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் கேரளா, கர்நாடகாவுக்கு கடத்துவதை தடுக்க அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கலெக்டர் அருணா உத்தரவின் பேரில், கூடலூர் நகரில் வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் உள்ளிட்டோர் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஊட்டியில் இருந்து கூடலூர் புதிய பஸ் நிலையத்துக்கு கர்நாடகா அரசு பஸ் பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. தொடர்ந்து அந்த பஸ்சில் அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். இதில் பயணிகளின் இருக்கைகளுக்கு அடியிலும், பொருட்கள் வைக்கும் பகுதிகளிலும் 25 மூட்டைகள் இருந்தது. அதை பிரித்து பார்த்த போது, நீலகிரி மாவட்ட ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ராகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு டன் ராகி பறிமுதல்

இதுதொடர்பாக பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ஆனால், ராகி மூட்டைகளை கடத்த முயன்றது யார் என்பது தெரியவில்லை. இதையடுத்து தமிழக ரேஷன் பொருட்களை பஸ்சில் கடத்தி செல்வது தெரியவந்து உள்ளதால், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என டிரைவர், கண்டக்டருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

பின்னர் ஒரு டன் ராகி, 250 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கர்நாடக பஸ்சை பறிமுதல் செய்து வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து பயணிகள் அனைவரும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதன் பேரில், ½ மணி நேரத்தில் கர்நாடக பஸ் விடுவிக்கப்பட்டது. இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, அரசு பஸ்கள் உள்பட எந்த வாகனங்களிலும் ரேஷன் பொருட்களை கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுப்பதுடன், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்