சீர்மரபினர் வகுப்பினருக்கு ஒரே சான்றிதழ்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

68 வகுப்பினர்கள் சீர்மரபினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-16 11:43 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேய ஆட்சியில் குற்றப்பரம்பரை சட்டத்தினால் பாதிக்கப்பட்ட வகுப்பினர்கள், சீர்மரபினர் வகுப்பு என வகைப்படுத்தப்பட்டு மிகப்பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருடன் சேர்த்து 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு 68 வகுப்பினர்கள் சீர்மரபினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. கருணாநிதி தலைமையிலான அரசால் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 29.7.2008இல் அரசாணை (நிலை) எண்.85-இல் தமிழ்நாடு சட்டம் 45/1994இன் கீழ் அறிவிக்கை வெளியிடப்பட்டு, சீர்மரபினர் வகுப்பினர் என சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.  

பின்னர், அரசாணை (நிலை) .26. பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாள் 8.3.2019இல் வெளியிடப்பட்ட ஆணையில், மாநில அரசின் 20 சதவீதம் இடஒதுக்கீடு மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு இந்த 68 வகுப்பினர்களும் சீர்மரபினர் என அழைக்கப்படுவர், எனவும் மத்திய அரசின் நலத்திட்ட பயன்களைப் பெறுவதற்கு இந்த 68 வகுப்பினர்களும் சீர்மரபினர் என அழைக்கப்படுவர் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட அரசாணைகளின்படி இரண்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவற்றை பெறுவதில் நடைமுறையில் சிரமம் உள்ளதாகவும் அதற்கு பதிலாக ஒரே சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. அந்த கோரிக்கைகளை அரசு ஆய்வு செய்து, சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு இரண்டு சான்றிதழ்களுக்குப் பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க தெளிவுரைகள் வழங்குமாறு முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய தெளிவுரையின்படி, இனி வருவாய் அலுவலர்கள் சீர்மரபின வகுப்பினர்களுக்கு ஒரே சான்றிதழ் வழங்குவார்கள்.

இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்