நீலகிரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

நீலகிரியில் மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். அவர்கள் வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்.

Update: 2023-08-29 22:00 GMT

கூடலூர்

நீலகிரியில் மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். அவர்கள் வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்.

ஓணம் பண்டிகை

கேரளாவில் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஓணம் கொண்டாடப்படுகிறது. திருவோண நாளில் கேரளாவை ஆண்ட மாவேலி மன்னன் மக்களை சந்திக்க வருவது ஐதீகம். அதன்படி, நேற்று மாவேலி மன்னனை வரவேற்கும் வகையில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை மலையாள மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் வசிக்கும் மலையாள மக்கள் புத்தாடைகள் அணிந்து, வீடுகள் முன்பு பல்வேறு வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டனர். தொடர்ந்து கூடலூர் புத்தூர் வயல், பொன்னானி மகாவிஷ்ணு கோவில்களில் ஏராளமான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் உறவினர்கள், நண்பர்களுடன் பல்வேறு வகையான காய்கறிகள், பாயாசம் கொண்ட ஓணம் விருந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

அத்தப்பூ கோலம்

ஓணம் பண்டிகையையொட்டி கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் வாழ்ந்து வரும் மலையாள மக்கள் கடந்த 10 நாட்களாக வீட்டின் வாசலில் பல்வேறு வண்ண மலர்களை கொண்டு அத்தப்பூ கோலம் இட்டனர். திருவோணம் நாளான நேற்று அதிகாலை எழுந்து பெண்கள் புத்தாடை அணிந்து வீட்டு வாசல்களில் மாவேலி மன்னனை வரவேற்கும் விதமாக அத்தப்பூ கோலமிட்டு இருந்தனர். பின்னர் கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடுகளை நடத்தி வழிபட்டனர் தொடர்ந்து அவர்கள் மதியம் ஓணம் சத்யா எனப்படும் பல்வேறு வகையான உணவுகளை தயாரித்து குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் உண்டு மகிழ்ந்தனர்.

கோத்தகிரி கடைவீதியில் உள்ள அய்யப்பன் கோவிலில் அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. அங்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அடைப்பாயாசம் வழங்கப்பட்டது. கோவிலில் அத்தப்பூ கோலமிடப்பட்டு இருந்தது. ஊட்டி அய்யப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. அங்கு மலையாள மக்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். இதேபோல் குன்னூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. மேலும் பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்