கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பொய்கை மாட்டுச் சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானது.

Update: 2022-12-20 18:43 GMT

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பொய்கை மாட்டுச் சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானது.

மாட்டுச்சந்தை

வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச் சந்தை நடைபெறுகிறது. இதில் மாடு, ஆடு, கோழி உள்ளிட்டவற்றை வியாபாரிகள், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். முக்கிய விழா காலங்களில் கால்நடைகளின் விலை அதிகமாக இருக்கும்.

தற்போது மார்கழி மாதம் என்பதால் பலர் அய்யப்பன் கோவில், முருகன் கோவில், உள்ளிட்ட கோவில்களுக்கு மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கி உள்ளனர். மேலும் கடந்த 2 வாரமாக புயல் மழை காரணமாக சந்தையில் வியாபாரம் பெருமளவு நடக்கவில்லை. இதனால் கடந்த சில வாரங்களாக கால்நடைகளின் விற்பனை மந்தமாக காணப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகை

இந்த நிலையில் வருகிற 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று பொய்கை சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வேலூர் மாவட்டம் மற்றும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

அதை வாங்குவதற்காக வியாபாரிகளும், பொதுமக்களும் சந்தையில் குவிந்தனர். அவர்கள் போட்டி போட்டு கால்நடைகளை வாங்கிச் சென்றனர்.

குறிப்பாக ஜெர்சி, கலப்பின மாடுகள், காளைகள், உழவு மாடுகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகளும், 500-க்கும் மேற்பட்ட ஆடுகளும், கோழிகளும் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. ஒட்டுமொத்தமாக பொய்கை சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்