கருணை அடிப்படையில் மின்வாரிய பணியாளர் மகனுக்கு 8 வாரத்தில் ேவலை வழங்க வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு
மின்வாரிய பணியாளர் மகனுக்கு கருணை அடிப்படையில் வேலையை 8 வாரத்தில் வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மின்வாரிய பணியாளர் மகனுக்கு கருணை அடிப்படையில் வேலையை 8 வாரத்தில் வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கருணை வேலை வழங்கக்கோரி மனு
திருச்சியை சேர்ந்த உதயகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எனது தந்தை மின்வாரியத்தில் உதவியாளராக பணியில் இருந்தபோது 2018-ம் ஆண்டுஇறந்துவிட்டார்.
இதனால் எனக்கு கருணை வேலை கோரி 2019-ம் ஆண்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தேன். எனது மனு மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அதை விசாரித்த ஐகோர்ட்டு, என் மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஆனால் எனது தந்தை தற்காலிக பணியாளர் என்பதால் கருணை அடிப்படையில் பணி வழங்க முடியாது என மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் 2021-ல் உத்தரவிட்டார். இதை ரத்து செய்து கருணை பணி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
8 வாரத்தில் வழங்க உத்தரவு
இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மின்வாரியத்தின் வக்கீல் ஆஜராகி, மனுதாரரின் தந்தைக்கு சட்டப்படி நிரந்தர பணியாளர் அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனால் அவர் நிரந்தர பணியில் சேரவில்லை. இதனால் மனுதாரருக்கு கருணை வேலை வழங்க முடியாது என்றார்.
விசாரணை முடிவில், மனுதாரரின் தந்தை நிரந்தர பணியாளர் அந்தஸ்து பெற்றுள்ளார். அதற்கான தொழிலாளர் இன்ஸ்பெக்டரின் உத்தரவு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
மனுதாரரின் தந்தை நிரந்தர பணியில் சேரவில்லை என்பதற்கான ஆதாரங்களை மின்வாரியம் தாக்கல் செய்யவில்லை. இதனால் அவரை நிரந்தர பணியாளராகத்தான் கருத வேண்டும். அதன்படி மனுதாரர் கருணைப்பணி பெற தகுதியானவர். அவருக்கு 8 வாரத்தில் பணி வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.