கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி

மகனுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை ரத்து செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் நிரப்பிய பாட்டிலுடன் வந்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-19 18:45 GMT

நாகர்கோவில்:

மகனுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை ரத்து செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் நிரப்பிய பாட்டிலுடன் வந்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

குறைதீர்க்கும் கூட்டம்

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மனு கொடுக்க வருபவர்களிடம் போலீசார் நுழைவாயிலில் சோதனை நடத்தி உள்ளே அனுமதித்தனர்.

அந்த சமயத்தில் கல்குளம் தாலுகா காரங்காடு மேல ஆலன்விளையை சேர்ந்த ரோஸி (வயது 65) என்பவர் மனு அளிக்க வந்தார். உடனே கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை சோதனை செய்தனர். அப்போது ரோஸியிடம் ஒரு சிறிய பாட்டிலில் பெட்ரோல் நிரப்பியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பெட்ரோல் நிரப்பிய பாட்டில்

அந்த சமயத்தில் திடீரென ரோஸி தனது உடலில் பெட்ரோலை ஊற்ற முயன்றார். ஆனால் துரிதமாக செயல்பட்ட போலீசார் ரோஸி கையில் வைத்திருந்த பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை பறித்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ரோஸி கூறுகையில், "எனது சொத்துகளை என் மகனுக்கு எழுதிக்கொடுத்து விட்டேன். தற்போது வயோதிகம் காரணமாக கவனிப்பார் இன்றி அவதிப்படுகிறேன். எனவே என் மகனுக்கு நான் எழுதிக்கொடுத்த சொத்துகளை முதியோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ் ரத்து செய்ய வேண்டும். இதுதொடர்பாக பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தேன். ஆனால் எனது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. எனவே தான் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தேன். அதன் பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்து இங்கே வந்தேன். ஆனால் போலீசார் என்னை தடுத்து நிறுத்தி விட்டனர்" என்றார்.

இதைத் தொடர்ந்து ரோஸியை போலீசார் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் நிரப்பிய பாட்டிலுடன் வந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

மற்றொரு பெண்

இந்த பரபரப்பு அடங்கிய 2 மணி நேரத்தில் மற்றொரு பெண் தனது பையில் ஸ்குரு டிரைவ் வைத்து கொண்டு வந்தார். அதை பறிமுதல் செய்த போலீசார் எதற்காக ஸ்குரு டிரைவை கொண்டு வந்துள்ளீர்கள்? என்று கேட்டனர். அப்போது, "வீட்டில் பயன்படுத்துவதற்காக வைத்திருந்த பொருள் தவறுதலாக பையில் கிடந்துள்ளது. அதை நான் கவனிக்காமல் கொண்டு வந்துவிட்டேன்" என்று கூறினார். இதைத் தொடர்ந்து அந்த பெண்ணை கலெக்டர் அலுவலகத்துக்குள் போலீசார் அனுமதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்