வீட்டில் பிணமாக கிடந்த மூதாட்டி

நாகையில் வீட்டில் பிணமாக கிடந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-09-24 18:45 GMT

நாகையில் வீட்டில் பிணமாக கிடந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிணமாக கிடந்த மூதாட்டி

நாகை செக்கடி தெருவை சேர்ந்தவர் சிங்காரம். இவரது மனைவி சீதா (வயது 78). இவர்களுக்கு 4 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி அனைவரும் பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். நேற்று நள்ளிரவில் திடீரென சீதா காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டுள்ளார்.

அவரது சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் சீதா வீட்டிற்கு சென்றனர். அப்ேபாது சீதா வீட்டில் இருந்து ஒரு வாலிபர் முகத்தை துணியால் மூடிக்கொண்டு தப்பி ஓடினார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது சீதா சேலையால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்துகிடந்தார்.

தடயங்கள் சேகரிப்பு

இதுகுறித்த தகவலின் பேரில் நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரியா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது, மூதாட்டியின் உடல் பகுதியில் எந்த காயமும் இல்லை என்பது தெரியவந்தது. கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் சம்பவ இடத்தை பார்வையிட்டார். பின்னர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

கொலை செய்யப்பட்டாரா?

இதுகுறித்து நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீதா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் தனியாக வசித்த மூதாட்டி நகைக்காக கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வீட்டில் மூதாட்டி பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்