மின்சாரம் தாக்கி மூதாட்டி சாவு
பட்டுக்கோட்டை அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த மூதாட்டி மின்சாரம் தாக்கி இறந்தார்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த மூதாட்டி மின்சாரம் தாக்கி இறந்தார்.
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தார்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் அங்கு அடிக்கடி மின்தடை ஏற்பட்டது.
பட்டுக்கோட்டையை அடுத்த வெண்டாக்கோட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி சிங்காரவேலு மனைவி காந்திமதி(வயது 66) நேற்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியில் வந்தார். அப்போது தோட்டத்தில் காற்றில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை கவனிக்காமல் மிதித்து விட்டார்.
மின்சாரம் தாக்கி சாவு
இதனால் அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் மூதாட்டி காந்திமதி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அருள்முருகன், பட்டுக்கோட்டை தாசில்தாருக்கு தகவல் கொடுத்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காந்திமதியின் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.