ஆடிப்பாடி அசத்திய முதியவர்கள்

திண்டுக்கல்லில் நடந்த சர்வதேச முதியோர் தினவிழாவில் முதியோர்கள் ஆடிப்பாடி அசத்தினர். அவர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

Update: 2022-10-01 18:45 GMT

சர்வதேச முதியோர் தினவிழா


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திண்டுக்கல்லில் நேற்று சர்வதேச முதியோர் தினவிழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் முன்னிலை வகித்தார். விழாவில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


இதில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு கிரீடம், சால்வை அணிவிக்கப்பட்டது. மேலும் இந்திய தேர்தல் ஆணையர் வழங்கிய பாராட்டு சான்றிதழை கலெக்டர் விசாகன் வழங்கினார். அப்போது சில முதியவர்கள் உற்சாகத்தில் பாட்டுபாட, சிலர் எழுந்து நின்று ஆடினர். இதனால் இறுக்கமான சூழல் மாறி, கலகலப்பானது.


அப்போது கலெக்டர் விசாகன் பேசுகையில், இந்திய மக்கள் தொகையில் 9 சதவீதம் முதியவர்கள் உள்ளனர். ஆனால் தமிழகத்தில் 10.4 சதவீதம் முதியவர்கள் இருக்கின்றனர். தமிழகத்தில் முதியோருக்கு கிடைக்கும் மருத்துவம் உள்ளிட்ட வசதிகளே காரணம். முதுமை என்பது ஒரு நோய் அல்ல. நாம் அனைவரும் கடந்து வரக்கூடிய பருவம் தான். உலகில் அனுபவத்தை மிஞ்சிய செயல் எதுவும் இல்லை.


சமூகத்தின் சுவடுகள்


முதியவர்கள் நமது கலாசார சின்னங்கள், சமூகத்தின் சுவடுகள் ஆவர். எனவே முதியவர்களை பேணி காப்பது நமது தலையாய கடமை. முதியோரின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக குறைதீர்க்கும் கூட்டம், முகாம்களில் மனுக்கள் பெறப்பட்டு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. அதற்காக தனி அலுவலர்களும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டத்தின் மாவட்ட, மாநில அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 14567 என்ற உதவி எண்ணில் மூத்த குடிமக்கள் ஆலோசனைகள் பெறலாம், என்றார்.


இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார், சமூக நலஅலுவலர் புஷ்பகலா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி, தாசில்தார்கள் சந்தனமேரிகீதா, ரமேஷ்பாபு, சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.





Tags:    

மேலும் செய்திகள்