மூதாட்டி வீடுபுகுந்து நகை, பணம் திருடிய 2 பேர் சிக்கினர்

ஓட்டப்பிடாம் அருகே மூதாட்டி வீடுபுகுந்து நகை, பணம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-04 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே மூதாட்டி வீடுபுகுந்து நகைகள், பணத்தை திருடி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நகை, பணம் திருட்டு

ஓட்டப்பிடாரம் அருகே கோவிந்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி பாப்பா (வயது 70). கிருஷ்ணன் இறந்து விட்டார். மகன், மகளுக்கு திருமணம் முடிந்து தனித்தனியாக குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். வீட்டில் பாப்பா தனியாக வசித்து வருகின்றார்.

இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி இரவு வீட்டை பூட்டி விட்டு எதிரே உள்ள தனது மகள் வீட்டில் அவர் தூங்க சென்றுள்ளார். மறுநாள் அதிகாலையில் பாப்பா தனது வீட்டிற்கு சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து பாப்பா அளித்த புகாரின்பேரில் மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு லோகேஸ்வரன் உத்தரவின் பேரில் மணியாச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் மற்றும் போலீசார் அடங்கி தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

இதில், பாப்பா வீட்டில் நகை, பணத்தை திருடியது கொடியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துராஜ், அக்கநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் அர்ச்சுனன் ஆகியோர் என தெரிய வந்தது. அந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 19½ பவுன் நகைகள் மற்றும் ரூ.40ஆயிரம் பணம் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் ைசக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். திருட்டு சம்பவம் 48 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்