ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாய் உடைந்து வீணான குடிநீர்

குடியாத்தத்தில் கால்வாய் தோண்டியபோது ஒகனேக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து குடிநீர் வீணானது.

Update: 2023-04-21 16:56 GMT

சாலை விரிவாக்கம்

குடியாத்தம் நகராட்சி பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஹைதர்புரம் பகுதியில் உள்ள ராட்சத தரைதள குடிநீர் தொட்டிக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் வருகிறது. அங்கிருந்து ராட்சத பைப்புகள் மூலம் குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் உள்ள தரைத்தள தொட்டிக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு நகரின் பல பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. அதே போல் சந்தைப்பேட்டை பகுதியில் இருந்து செதுக்கரை ஜீவா நகர் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிக்கு ராட்சத பைப்புகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

இந்தநிலையில் குடியாத்தத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் செதுக்கரை விநாயகபுரம் பகுதியில் இருந்து சித்தூர் கேட் வரை சாலையின் இருபுறமும் புதிதாக கால்வாய் அமைத்து சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக குடியாத்தம்- பள்ளிகொண்டா சாலையில் கொண்டசமுத்திரம் பகுதியில் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய் தோண்டப்பட்டது.

ராட்சத குழாய் சேதம்

அப்போது எதிர்பாராத விதமாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாய் சேதமடைந்தது. இதனால் பலஅடி உயரத்திற்கு குடிநீர் பீச்சி அடித்து பல்லாயிரம் லிட்டர் குடிநீர் வீணாக சென்றது. இது குறித்து தகவல் அறிந்ததும் நகராட்சி அதிகாரிகள் குடிநீர் செல்லும் இணைப்பை நிறுத்தினர். தொடர்ந்து நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் சிசில்தாமஸ் ஆகியோர் குடிநீர் குழாய் சேதமடைந்ததால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

அதன்பேரில் உடனடியாக குடியாத்தம் நகராட்சி குழாய் பொருத்தனர் குமரேசன் தலைமையில் பணியாளர்கள் சுமார் 6 மணி நேரம் போராடி சேதமடைந்த குழாயை சீர் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்