சிங்கம்புணரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதிதாக ரூ.3.50 கோடி மதிப்பில் அலுவலக கட்டிடம் கட்டும் பணி கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டு ஓராண்டு காலமாக நடைபெற்று வருகிறது. இந்த கட்டிட பணிகளை உணவு பாதுகாப்பு துறை ஆணையர், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான லால்வேனா தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் முன்னிலையில் ஆய்வு பணி நடைபெற்றது. கட்டிடங்கள் கட்டும் பணி குறித்தும் வரைபடத்தில் உள்ள பகுதிகள் குறித்தும் அதன் உறுதித்தன்மை குறித்தும் பொறியாளர்களிடம் ஆணையர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து கட்டிட பணிகளை விரைவாக முடிக்க அவர் அறிவுறுத்தினார்.
முறையூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தையும், எஸ்.எஸ்.கோட்டை கிராம ஊராட்சி அலுவலக கட்டிடத்தையும் மேலும் மகளிர் திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்படும் கோழிப்பண்ணைகள், ஆட்டு பண்ணைகள் செயல்பாட்டு முறைகள் குறித்தும், அரளிகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்தும் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி லட்சுமண ராஜு, உதவி செயற்பொறியாளர்கள் இளங்கோவன், மஞ்சுளா மற்றும் தலைமை இடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.