பூண்டி ஏரியில் அதிகாரிகள் ஆய்வு

பூண்டி ஏரியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.;

Update:2022-08-14 13:50 IST

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. 1944-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீர் வரை சேமித்து வைக்கலாம். ஏரியின் அருகே நீரியல் ஆய்வுக்கூடம் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள முல்லை பெரியாறு, மேட்டூர் அணை உள்பட அனைத்து நீர்த்தேக்கங்களின் வடிவமைப்பு மாதிரிகள் இந்த நீரியல் ஆய்வு கூடத்தில்தான் உள்ளன. அணை கட்டும் போது அங்குள்ள மண்ணின் தன்மை, எத்தனை அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம், மதகுகள் எவ்வாறு அமைக்க வேண்டும், அந்த மதகுகள் வழியாக அதிகபட்சமாக எவ்வளவு தண்ணீர் திறந்து விடலாம், உபரி நீர் செல்லும் பாதை ஆகியவற்றை இந்த ஆய்வுக்கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பித்த பின்னரே அணை கட்டுவது வழக்கம். தமிழ்நாட்டில் வேறு எங்கும் இதுபோன்ற நீரியல் ஆய்வுகூடம் கிடையாது.

கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் பெய்த கனமழைக்கு பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது. அப்போது தண்ணீரின் அழுத்தத்தால் ஏரியின் அருகே உள்ள மதகு கிணறு சேதமடைந்து நீரியல் ஆய்வுக்கூடத்தில் வெள்ளம் புகுந்தது. நூற்றுக்கணக்கான மணல் மூட்டைகளை கொண்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்தநிலையில் சேதமடைந்த மதகு கிணறுகள் அகற்றப்பட்டு புதிதாக 3 மதகு கிணறுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதகு கிணறு அமைக்கும் பணி கடந்த மாதம் தொடங்கிய நிலையில் இந்த மாதத்தில் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் பூண்டி ஏரியின் நீர் சூழ்ந்துள்ளதால் மதகு கிணறுகள் அமைக்கும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சத்தியநாராயணா மற்றும் உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் மதகு கிணறுகள் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்