தெருநாய்களை விரட்டி பிடித்து தடுப்பூசி போட்ட அதிகாரிகள்

உலக வெறிநோய் தடுப்பு தினத்தையொட்டி, திண்டுக்கல்லில் தெருநாய்களை விரட்டி பிடித்து மாநகராட்சி அதிகாரிகள் தடுப்பூசி போட்டனர்.

Update: 2023-09-28 23:45 GMT

தெருநாய்கள் தொல்லை

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்படாமல் இருப்பதால் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இரவில் தெருக்களில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமின்றி தெருநாய்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் சொல்வோரைதெருநாய்கள் விரட்டி, விரட்டி கடிக்கின்றன. இதனால் பலர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.

தினமும் 25 பேருக்கு கடி

நாளுக்குநாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லையை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். ஆனால் இந்த கோரிக்கை, கிணற்றில் போடப்பட்ட கல்லைப்போலவே உள்ளது. நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது புரியாத புதிராக இருப்பதாக திண்டுக்கல் நகர மக்கள் புலம்புகின்றனர். தெருநாய்களிடம் கடிபட்டு தினமும் 25 பேர், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவதே இதற்கு சான்று.

பெருகி வரும் தெருநாய்களின் எண்ணிக்கையை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக எதிரொலிக்கிறது.

விரட்டி பிடித்த அதிகாரிகள்

இந்தநிலையில் தெருநாய்கள் மூலம் பொதுமக்களுக்கு நோய் பரவாமல் தடுக்க, வெறிநோய் தடுப்பூசி போடும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

உலக வெறிநோய் தடுப்பு தினமான நேற்று மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரிந்த 10 தெருநாய்களை விரட்டி பிடித்த அதிகாரிகள், வெறிநோய் தடுப்பூசி போடுவதற்காக அவற்றை திண்டுக்கல் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை டாக்டர் சரவணக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தினர்.

இதேபோல் வீடுகளில் வளர்ப்போரும், தாங்கள் வளர்க்கும் நாய்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக திண்டுக்கல் கால்நடை மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு 15 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

உலக வெறிநோய் தடுப்பு தினத்தையொட்டி மாநகராட்சி அதிகாரிகள், கால்நடை பராமரிப்பு துறையினர் தெருநாய்களுக்கு தடுப்பூசி போட்டனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இந்த நடவடிக்கை தினமும் தொடர வேண்டும் என்று திண்டுக்கல் நகரவாசிகளின் விருப்பம் ஆகும். இதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உறுதிமொழி ஏற்பு

இதற்கிடையே உலக வெறிநோய் தடுப்பு தின உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் போடிநாயக்கன்பட்டி கால்நடை பெருமருத்துவமனை வளாகத்தில் நடந்தது. இதில் மாநகர்நல அலுவலர் (பொறுப்பு) செபாஸ்டின், சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் முகமது அப்துல் காதர், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் விஜயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதேபோல் கொசவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், உலக வெறிநோய் தடுப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார் தலைமை தாங்கி, நாய் கடிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், தடுப்பூசி போட்டு கொள்வதன் அவசியம் குறித்தும் பேசினார்.

இதில் சுகாதார ஆய்வாளர் முனியப்பன், மருத்துவ அலுவலர் ஜெயந்தி, செவிலியர்கள் செல்வராணி, பேச்சியம்மாள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில் அனைவரும் உலக வெறிநோய் தடுப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்