உளுந்து பயிரில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த அதிகாரி ஆலோசனை

உளுந்து பயிரில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த அதிகாரி ஆலோசனை வழங்கினார்.

Update: 2023-03-25 17:57 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்படுவதற்கான முன் அறிவிப்பு கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து வரப்பெற்றுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டு 1,541 எக்டேர் பரப்பளவில் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி நிலையில் உள்ள உளுந்து மற்றும் பயறு வகைகளை தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் ஆகியவற்றின் தாக்குதலை கட்டுப்படுத்திட பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன. எனவே, விவசாயிகள் கட்டுப்பாட்டு முறைகளை கடைபிடித்து உளுந்து மற்றும் பயறு வகைகளில் கூடுதல் மகசூல் பெற்றிட அறிவுறுத்தப்படுகிறது. உளுந்து பயிரினை தாக்கும், காய் நாவாய் பூச்சிகளை ஒரு ஏக்கருக்கு டைமீத்தோயேட் 30 சதவீதம், இ.சி. என்ற மருந்து 200 மி.லி., புள்ளி காய்துளைப்பான் மற்றும் பச்சை காய்துளைப்பான் ஆகியவற்றை கட்டுப்படுத்திட குளோரான்ட்ரானிலிபுரோல் 18.5 எஸ்.சி. என்ற மருந்து 60 மி.லி., உளுந்து மற்றும் துவரை பயிர்களில் காணப்படும் சாம்பல் நோயினை கட்டுப்படுத்திட ஒரு ஏக்கருக்கு கார்பன்டாசின் என்ற மருந்து 200 கிராம் அல்லது நனையும் கந்தகத்தூள் என்ற மருந்து ஒரு ஏக்கருக்கு 600 கிராம் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம். சாகுபடி செய்யப்பட்டுள்ள தட்டை பயிரில் காணப்படும் புள்ளி காய்த்துளைப்பான்களை தயோடிகார்ப் 75 சதவீதம், டபுள்யூ பி என்ற மருந்து 300 கிராம் என்ற அளவும் மற்றும் காய்நாவாய் பூச்சிகளை டைமீத்தோயேட் 30 சதவீதம், இ.சி. 200 மி.லி. தெளித்து கட்டுப்படுத்தலாம் என புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்