பாளையங்கோட்டையில் பள்ளி வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு

பாளையங்கோட்டையில் பள்ளிக்கூட வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

Update: 2022-06-10 22:13 GMT

நெல்லை, ஜூன்.11-

பாளையங்கோட்டையில் பள்ளிக்கூட வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பள்ளி வாகனங்கள்

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மும்முரமாக நடந்து வருகிறது. பள்ளிக்கூடங்களை சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளித்து சுகாதார பணிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளிக்கூடங்களுக்கு மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்லக்கூடிய பள்ளி வாகனங்கள் அதாவது பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களை ஆய்வு செய்யுமாறு போக்குவரத்து அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட நெல்லை, வள்ளியூர், அம்பை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

அதிகாரிகள் ஆய்வு

நெல்லை மாவட்டத்தில் உள்ள 155 தனியார் பள்ளிகளில் உள்ள பஸ்கள், வேன்கள் என மொத்தம் 511 வாகனங்கள் நேற்று சோதனை செய்யப்பட்டன. அந்த வாகனங்களில் கதவு, புட்போர்டு, ஜன்னல், டிரைவர் கேபின், அவசர வழி, முதலுதவி பெட்டி, தொடர்பு எண், பள்ளி வாகனங்களின் நிறம், குறிப்பிட்ட இடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளதா? மாணவர்கள் ஏறும் வழி, இறங்கும் வழிகளில் உறுதியான கதவுகள், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா?, மேலும் வாகனங்களில் இருக்கைகள் உள்ளிட்டவை முறையாக இடம்பெற்றுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.

பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இந்த வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நேற்று நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கவின் ராஜ், செண்பகவள்ளி, கனகவல்லி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இதில் 16 வகையான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா? என்று சோதிக்கப்பட்டது.

மேலும் வாகன ஓட்டுனர்களின் லைசென்ஸ், வயது விவரம் உள்ளிட்டவை சரியாக உள்ளதா? எனவும் ஆய்வு செய்தனர். இந்த சோதனையை நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர் மேற்பார்வை செய்தார்.

தீ தடுப்பு ஒத்திகை

இதைத்தொடர்ந்து வாகன டிரைவர்களுக்கு தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சியும் அளிக்கப்பட்டது. பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் வீரர்கள் தீத்தடுப்பு முறைகள் குறித்து ஒத்திகை நடத்தி விளக்கம் அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்