அரசு மணல் கிடங்கு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

மோகனூர் அருகே அரசு மணல் கிடங்கு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-12 18:32 GMT

மோகனூர்

மணல் குவாரி

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூர் பகுதியில் காவிரி ஆற்றில் மணல் அள்ளி, அதனை செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள அரசுக்கு சொந்தமான மணல் கிடங்கில் சேமித்து வைத்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த மணல் விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், சட்ட விரோதமாக மணல் விற்பனை நடைபெறுவதாகவும் புகார் எழுந்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் அமலாக்கத் துறையை சேர்ந்த 10 அதிகாரிகள், 7 பேர் கொண்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையுடன் செவிட்டுரங்கன்பட்டிக்கு வந்தனர்.

ஆன்லைன் மூலம் விற்பனை

பின்னர் அவர்கள் மணல் கிடங்கில், அலுவலகத்தில் திடீரென சோதனையை தொடங்கினர். இந்த சோதனையில் ஆற்றிலிருந்து எவ்வளவு மணல் அள்ளி வந்து சேமிக்கப்படுகிறது. அதில் எவ்வளவு மணல் விற்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் பதிவு மூலம் எவ்வளவு விற்பனை நடைபெற்று உள்ளது. அதற்காக எவ்வளவு பணம் பெறப்பட்டது என்பது குறித்தும், அதற்கான ஆவணங்கள் முறையாக உள்ளதா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்றில் மணல் அள்ளி அதனை கிடங்குக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்தை புதுக்கோட்டையை சேர்ந்த ராமையா என்பவரும், குவாரியில் உள்ள மணலை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் ஒப்பந்தத்தை புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவரும் பெற்று உள்ளனர். இவர்கள் இருவரும் புதுக்கோட்டையை சேர்ந்த மணல் ஒப்பந்ததாரர் ராமச்சந்திரனுக்கு நெருக்கமானவர்கள் என கூறப்படுகிறது.

இதற்கிடையே நேற்று காலை அமலாக்கத்துறையை சேர்ந்த அதிகாரிகள் சோதனைக்கு வருவதை அறிந்த மணல் கிடங்கில் பணியாற்றி வந்த புதுக்கோட்டையை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள், மணல் அள்ளும் பொக்லைன் எந்திர ஆபரேட்டர் உள்ளிட்ட அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தபோது, அங்கு பணியில் இருந்தவர்களில் பொதுப்பணித் துறை ஒப்பந்த ஊழியர் ஒருவர் மட்டுமே அலுவலகத்தில் இருந்தார். எனவே அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். பின்னர் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சங்கீதா மணல் குவாரிக்கு வரவழைக்கப்பட்டு, அவரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மற்றும் விசாரணை மாலை வரை நீடித்தது. இதையொட்டி மணல் குவாரிக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்ததால், வேறு யாரும் அங்கு அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்