காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு

ஊட்டியில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப் பட்டது.

Update: 2023-10-21 20:30 GMT

ஊட்டியில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப் பட்டது.

காவலர் வீரவணக்க நாள்

1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ந் தேதி இந்திய எல்லை பகுதியான லடாக் அருகே உள்ள ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில், மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 10 போலீசார் வீரமரணம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று நாடு முழுவதும் பணியின் போது உயிர் நீத்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வடிவேல், நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மவுன அஞ்சலி

இந்தியா முழுவதும் பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து மவுன அஞ்சலி மற்றும் மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் போலீசார் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். அப்போது துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக போலீசார் தஙகளது சீருடைகள் மற்றும் கைகளில் கருப்பு பட்டை அணிந்து இருந்தனர்.

இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்தரராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கர், விஜயலட்சுமி, ரவிச்சந்திரன், செந்தில்குமார், செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் சமூகத்தில் சட்டம்-ஒழுங்கை பேணி பாதுகாக்க தினமும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் போலீசாரின் தியாகங்களை நினைவுகூரும் வகையில், அவர்களை பாராட்டி நேற்று பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்