அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததற்கு எதிர்ப்பு:பெருந்துறை பேரூராட்சி கூட்டத்தில் தி.மு.க.- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததற்கு எதிர்ப்பு தெரிவித்து பெருந்துறை பேரூராட்சி கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2023-05-26 21:22 GMT

பெருந்துறை

அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததற்கு எதிர்ப்பு தெரிவித்து பெருந்துறை பேரூராட்சி கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு

பெருந்துறை பேரூராட்சி கவுன்சில் கூட்டம் கடந்த 3 மாதங்களுக்கு பிறகு நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு தி.மு.க.வை சேர்ந்த பேரூராட்சி தலைவர் ஓ.சி.வி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தர்ராஜ் முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில், 10 தி.மு.க. கவுன்சிலர்களும், 4 அ.தி.மு.க. கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். மொத்தம் 35 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. இவற்றை நிறைவேற்றி தரும்படி பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன் கூறினார்.

இதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவர்கள், கடந்த 15 மாதங்களாக பேரூராட்சி பகுதிகளில் நிறைவேற்றப்படாமல் இருந்து வரும் அடிப்படை வசதிகளை முதலில் நிறைவேற்றித் தாருங்கள். அதன்பின்னர் இந்த தீர்மானங்கள் குறித்து முடிவு எடுப்போம் என்று கூறினார்கள்.

வெளிநடப்பு

இவர்களுக்கு ஆதரவாக தி.மு.க. கவுன்சிலர்கள் 11 பேரில் 6 பேர் நிலுவையில் உள்ள பணிகளை முதலில் செய்து முடியுங்கள். அதன்பின்னர் இந்த கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் குறித்து முடிவு எடுப்போம் என்று கூறினார்கள்.

பெருந்துறை பேரூராட்சியில் தலைவர் உள்பட மொத்தம் 15 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் தலைவருடன் சேர்ந்து தி.மு.க. கவுன்சிலர்கள் 5 பேர் மட்டுமே தீர்மானங்களை நிறைவேற்ற ஆதரவு தெரிவித்தனர். தீர்மானங்களை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வைச்சேர்ந்த 6 கவுன்சிலர்களும், அவர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த 4 கவுன்சிலர்களும் என மொத்தம் 10 பேர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனால் நேற்று கூடிய பெருந்துறை பேரூராட்சி கவுன்சில் கூட்டத்தில் எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்