குளத்தை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்

திண்டுக்கல் அருகே உள்ள செங்குளத்தை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. நிலத்தடிநீர் அதலபாதாளத்துக்கு செல்லும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-01-11 19:00 GMT

செங்குளம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே தாடிக்கொம்பு சாலையோரத்தில் செங்குளம் அமைந்துள்ளது. 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் பத்மாநகர், சரளப்பட்டி பிரிவு, காமனூர் ஆகிய ஊர்களை இணைக்கும் வகையில் இந்த குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் மூலம் செட்டிநாயக்கன்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 150 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அதோடு இந்திராநகர், பாறையூர், செட்டிநாயக்கன்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கான குடிநீர் ஆதாரமாகவும் இந்த குளம் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குளத்தை சுற்றிலும் கரைப்பகுதிகள் பலமாக இருந்தன. ஆனால் அதன் பிறகு குளம் முறையாக தூர்வாரப்படாததால் கரை பகுதிகள் பலம் இழந்து வருவதோடு, குளத்தின் ஒரு பகுதியில் கரையே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

குடியிருப்புக்குள் புகும் தண்ணீர்

கரை இல்லாததால் மழைக்காலத்தில் குளத்துக்கு நீர்வரத்து அதிகரிக்கும் போது குளத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். குளத்தில் இருந்து உபரிநீர் மறுகால் பாய்ந்து செல்லும் வகையில் 2 மதகுகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது ஒரு மதகு மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. அதுவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. மழைக்காலத்தில் குளத்துக்கு நீர்வரத்து அதிகரித்து குளம் அதன் முழு கொள்ளளவை எட்டியதும் உபரிநீர் மறுகால் பாய்ந்து கல்லுக்குளம், பூதிபுரம் வழியாக வாய்க்காலில் சென்று குடகனாற்றில் கலக்கிறது. இந்த நிலையில் செங்குளத்தை தூர்வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். அதையடுத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது.

பாதியில் நிறுத்தப்பட்டது

ஆனால் 5 ஏக்கர் பரப்பளவில் தூர்வாரும் பணிகள் நிறைவடைந்த நிலையில் அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தற்போது குளப்பகுதியை ஆக்கிரமித்து கருவேல மரங்கள் ஏராளமாக வளர்ந்துள்ளன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு செல்லும் அவலநிலை இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும் ஆர்.எம்.காலனி பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் குளத்தில் கலக்கிறது. இதனால் தண்ணீர் மாசடைவதுடன் அதனை குடிநீராக பயன்படுத்த முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

பூங்கா அமைக்க வேண்டும்

செல்வநாயகம் (திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்):- குளத்தில் தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும். அங்கு வளர்ந்திருக்கும் கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடக்கும் கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

மேலும் குளத்தை சீரமைப்பதுடன், கரைப்பகுதியில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை அமைக்க வேண்டும். குளத்தின் அருகில் சிறுவர்களுக்கான பூங்கா அமைத்தும், குளத்தில் படகு சவாரி விட ஏற்பாடு செய்யலாம். அதன் மூலம் ஊராட்சிக்கு வருமானம் கிடைக்கும் என்றும் ஒன்றிய கூட்டங்களில் வலியுறுத்தி வருகிறேன். குளத்தில் ஆக்கிரமிப்புகளும் தற்போது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க குளத்தின் பரப்பளவு விவரங்களுடன் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

கண்காணிப்பு கேமரா

வேலுச்சாமி (விவசாயி, செட்டிநாயக்கன்பட்டி):- செட்டிநாயக்கன்பட்டி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செங்குளத்தில் கழிவுநீர் கலப்பதால் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இரவில் குளப்பகுதியில் குப்பைகளும் கொட்டப்படுகின்றன. இதனை கண்காணிக்க குளப்பகுதியை சுற்றிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

அதோடு குளக்கரையை சுற்றிலும் பனைவிதைகளை விதைக்க வேண்டும். அப்படி செய்தால் பனைமரங்கள் வளர்ந்து குளக்கரையை பலப்படுத்தும். மேலும் குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க முடியாவிட்டாலும் அதனை சுத்திகரிப்பு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்