ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோடநாடு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்யக்கோரி திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் பசும்பொன், தெற்கு மாவட்ட செயலாளர் வைகைபாலன், முன்னாள் எம்.எல்.ஏ, சுப்புரத்தினம், அ.ம.மு.க. கிழக்கு, மேற்கு மாவட்ட செயலாளர் நல்லசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் செல்வபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் சுப்பிரமணியன் பேசுகையில், கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடையவர்களை 3 மாதத்தில் கைது செய்வோம் என கூறிவிட்டு, தற்போது அதனை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர். ஊழல் செய்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கு போடாமல் காலம் தாழ்த்தி வருகிறார். கட்சியை அபகரித்து எடப்பாடி பழனிசாமி தன்னை சர்வாதிகாரிபோல நினைத்துகொள்கிறார். கோடநாடு வழக்கில் உண்மையை கண்டறிந்தால் பலர் சிறைக்கு செல்ல நேரிடும். பின்னர் கட்சி ஓ.பன்னீர்செல்வம் வசமாகும். உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர். மேலும், அரசு சார்பில் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் உரிமைத்தொகை வழங்குவதற்கு முன்பே ஆட்சி முடிந்துவிடும். பா.ஜ.க. மற்றும் அண்ணாமலைக்கு எந்தவித நிலைபாடும் இல்லை. முடிந்தால் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று பார்க்கட்டும் என்றார். இதில் திண்டுக்கல் தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆர்.எம்.அருண்குமார், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மற்றும் அ.ம.மு.க.வினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் தொகுதி அமைப்பாளர் கோவிந்தன் நன்றி கூறினார்.