ஓ.பன்னீர் செல்வம் தரப்பிடம் 80 சதவீதம் அ.தி.மு.க.வினர் இல்லை, 80 பேர் மட்டுமே உள்ளனர் - முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார்

போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று தி.மு.க. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2022-08-16 11:06 GMT

சென்னை,

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஒத்தி வைக்காமல் அதனை இறுதி செய்ய வலியுறுத்தியும், போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் ஊழியர்களுக்கான குழுவில் அண்ணா தொழிற்சங்கம் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தொழிற்சங்க செயலாளர் கமலகண்ணன் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது,

போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்குவதை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தோம். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி மற்றும் பணப்பலன்களை உடனே வழங்கிட வேண்டும்.

போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று தி.மு.க. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை. பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் வேலைநிறுத்தம் செய்ய விரும்பவில்லை. ஆனால் அந்த நிலைக்கு எங்களை தள்ள வேண்டாம்.

ஓ.பன்னீர் செல்வம் தரப்பிடம் 80 சதவீதம் அ.தி.மு.க.வினர் இல்லை, 80 பேர் மட்டுமே உள்ளனர். சசிகலா, தினகரனை எந்த நிலையிலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை துணை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கொடுத்த மனுவை சட்டப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கவர்னர் அளித்த தேனீர் விருந்தில் கட்டாயமாக பங்கேற்க வேண்டும் என்ற அவசியமில்லை. முதல்-அமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்வதால் தமிழகத்திற்கு பயனில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்