தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு பேரணி
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு பேரணி நடத்தினர்.;
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சுங்கசாவடி பகுதியில் நேற்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது.
இதற்கு தமிழ்நாடு சத்துணவு சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் தேவ அதிசயம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் நாகராஜன், இளையராஜா மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் திவ்யா, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் சுந்தரம்மாள் ஆகியோர் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினர்.
இதில் 200-க்கும் மேற்ப்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்துகொண்டு 38 ஆண்டுகளாக சத்துணவு துறையில் பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்று அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக வந்தனர். இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு போராட்டம் நடத்தினர். முடிவில் தமிழ்நாடு சத்துணவு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் உதயகுமார் நன்றி கூறினார்.