கலெக்டர் அலுவலகம் முன்பு நர்சுகள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு நர்சுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் கலா முருகேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக் அலி, மருத்துவ பணியாளர் சங்க மாநில தலைவர் விவேகானந்தன், சத்துணவு பணியாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் ஜெசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நியமனம் செய்யப்பட்டு தற்போது பணி நீக்கம் செய்யப்பட்ட நர்சுகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள், நர்சுகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் சங்க மாவட்ட செயலாளர் அருள்மேரி நன்றி கூறினார்.