நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 31 வீடுகளுக்கு

சிதம்பரம் அருகே நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 31 வீடுகளுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது.

Update: 2023-08-23 19:51 GMT

சிதம்பரம், 

சிதம்பரம் அருகே உள்ள பரமேஸ்வரநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கொத்தனார் குடியிருப்பு பகுதியில் கடந்த 2000-ம் ஆண்டில் ஒருமுறை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பட்டா மூலம் 67 குடும்பத்தினர் மாடி வீடு மற்றும் கூரை வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனிநபர் ஒருவர் மேற்கண்ட இடத்தில் கட்டப்பட்ட வீடுகள் நீர், நிலைகளில் உள்ளதாகவும், அதனை அகற்ற வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனடிப்படையில் பசுமை தீர்ப்பாயம் மூலமாக கொத்தனார் குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்ட வீடுகளை காலி செய்ய வேண்டும் என்றும், 2000-ம் ஆண்டில் ஒருமுறை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பட்டா தவறானது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் நேற்று குமராட்சி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வமுத்து குமரன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் நாகேந்திரன், ஊராட்சி செயலாளர் பாபு, கிராம உதவியாளர் வெற்றிவேல் மற்றும் சிதம்பரம் தாலுகா போலீசார் கொத்தனார் குடியிருப்பு பகுதிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு வசிக்கும் பொதுமக்களிடம் நீர், நிலை ஆக்கிரமிப்பில் வீடுகள் கட்டியிருப்பதாகவும், அதனை உடனே அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு கொடுத்துள்ளதாக கூறி அங்கிருந்த 31 வீடுகளில் வசிப்பவர்களிடம் நோட்டீஸ் கொடுத்தனர். கண்ணீர் மல்க நோட்டீசை வாங்கிய அப்பகுதி மக்கள் தங்களுக்கு மாற்று இடம் தரவேண்டும் என அதிகாரியிடம் கோரிக்கை வைத்தனர். இருப்பினும் அதிகாரிகள் ஒரு மாத காலத்துக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று அவகாசம் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதி பொது மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்