சாவியை வைத்த இடத்தை நோட்டமிட்டு துணிகரம்: வருவாய் அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

திருத்தணி அருகே வருவாய் அதிகாரி வீட்டில் சாவி வைத்த இடத்தை நோட்டமிட்டு நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-06-11 08:45 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் சந்தான கோபாலபுரம் கிராமத்தில் வசிப்பவர் தேவராஜ் (வயது 38). இவர் திருவள்ளூர் தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

கடந்த வாரம் தேவராஜின் மனைவி தேவகி திருவிழாவிற்காக அரக்கோணம் அருகே உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றார். வீட்டில் தேவராஜ் மற்றும் அவரது தாயார் சுசிலா மட்டும் இருந்து வந்தனர். இந்த நிலையில் வழக்கம்போல் கடந்த புதன்கிழமை தேவராஜ் வேலைக்கு சென்றார். அவரது தாயார் தேவகி வீட்டை பூட்டி விட்டு சாவியை வீட்டில் மறைவான இடத்தில் வைத்து வெளியே சென்றார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் சாவியை எடுத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த நகை, பணத்தை திருடி சென்றனர். அந்த நேரத்தில் திருவிழாவிற்கு சென்ற தேவகி வீடு திரும்பினார். அப்போது வீட்டினில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 7 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சம்பவம் குறித்து தேவகி தனது கணவர் தேவராஜுக்கு தகவல் தெரிவித்தார்.

தேவராஜ் கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டை திறந்து திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்