மாமல்லபுரத்தில் குவிந்த வடமாநில சுற்றுலா பயணிகள்

3 ஆண்டுகளுக்கு பிறகு மாமல்லபுரத்திற்கு வட மாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் புராதன சின்னங்களை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

Update: 2022-06-06 12:51 GMT

வட மாநில சுற்றுலா பயணிகள்

குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் போன்ற வட மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், வயதான தம்பதியினர் தென் மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் ஒரு மாதம் முதல் 2 மாதம் வரை பஸ் பயணத்தின் மூலம் சுற்றுலா மற்றும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

கொரோனா தொற்றால் கடந்த 3 ஆண்டுகளாக வட மாநில சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது. தற்போது வட மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தனி பஸ்களில் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வர தொடங்கி உள்ளனர். நேற்று 10-க்கும் மேற்பட்ட பஸ்களில் வந்திருந்த வட மாநில சுற்றுலா பயணிகள் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தனர். அவர்கள் அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல், கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை கண்டுகளித்தனர். பின்னர் மாமல்லபுரம் கடற்கரைக்கு சென்று சீற்றத்துடன் காணப்படும் கடல் அலையின் அழகை கண்டுகளித்து பொழுதை கழித்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.

சாலையோரத்தில் சாப்பாடு

வடமாநிலத்தவர்கள் தங்கள் ஊரில் இருந்து வரும் பஸ்சிலேயே சமையல் பாத்திரங்கள், தானியங்கள் கொண்டு வந்து தாங்கள் செல்லும் ஊர்களில் சாலை ஓரங்களில் அடுப்பு மூட்டி தங்களுக்கு பிடித்த சப்பாத்தி, ரொட்டி, பருப்பு துவையல் உள்ளிட்டவைகளை தாங்களே சமைத்து சாலையோரத்தில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு செல்வது வழக்கம். அதேபோல் நேற்று மாமல்லபுரத்தில் வட மாநிலத்தவர்கள் சாலையோரத்தில் சப்பாத்தி, ரொட்டி தயாரித்து கூட்டம், கூட்டமாக சாலையோரத்திலேயே உற்றார், உறவினர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு விட்டு சென்றதை காண முடிந்தது. குறிப்பாக நேற்று வட மாநில சுற்றுலா பயணிகளால் மாமல்லபுரம் நகரம் களைகட்டியது.

Tags:    

மேலும் செய்திகள்