சென்னை சென்டிரல் வந்த ரெயிலில் 10 கிலோ கஞ்சா கடத்திவந்த வடமாநில இளம்பெண்

சென்னை சென்டிரல் வந்த ரெயிலில் 10 கிலோ கஞ்சா கடத்திவந்த வடமாநில இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-03-27 14:41 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தலையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வரும் ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்நிலையில், ஜார்க்கண்ட்டில் இருந்து இன்று சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வந்த தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரெயில்வே போலீசாருடன் இணைந்து மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது, ஜார்க்கண்ட்டில் இருந்து வந்த இளம்பெண் பயணியின் உடைமைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில், அப்பெண் 10 கிலோ கஞ்சாவை மறைத்து கொண்டுவந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அப்பெண்ணை கைது செய்த போலீசார் கடத்தி வரப்பட்ட கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளம்பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜோதிகா தாஸ் (வயது 25) என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ஜோதிகா கஞ்சாவை எங்கிருந்து வாங்கி வந்தார்? சென்னையில் யாரிடம் கொடுக்க கொண்டு வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்