வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை கூட்டம் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடந்தது.

Update: 2023-09-28 09:04 GMT

ஆலோசனை கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 2023-ஐ முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆலோசனை கூட்டம் காஞ்சீபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கூறியதாவது:-

கடந்த ஆண்டுகளில் பெய்த பெருமழையின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளை, 3 மிக அதிக பாதிக்கப்படும் பகுதிகள், 21 அதிக பாதிக்கப்படும் பகுதிகள், 26 நடுத்தர மற்றும் 22 குறைவாக பாதிக்கப்படும் பகுதிகள் என கண்டறியப்பட்டு மொத்தமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் 72 பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

மண்டல குழுக்கள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு 11 துறையை சேர்ந்த அலுவலர்களை கொண்டு 21 மண்டல குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் இந்த குழுக்களின் பணிகளை கண்காணிக்க 21 துணை கலெக்டர் நிலையிலான குழுத்தலைவர்கள் மற்றும் துணை குழுத்தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதை தெரிவித்தார்கள்.

வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க நிவாரண முகாம்கள் கண்டறியப்பட்டு, முகாம்களில் தேவைப்படும் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சார வசதிகள், வேட்டி மற்றும் சேலைகள், பாய், தலையணை, பெட்ஷீட், மளிகை பொருட்கள் இருப்பு, உணவு சமைப்பதற்கான இடம், சிலிண்டர் மற்றும் எரிவாயு பொருட்கள், மெழுகுவர்த்தி, டார்ச் லைட், ஜெனரேட்டர்கள் மற்றும் கழிவறை வசதிகள் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் உறுதி செய்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முழு ஒத்துழைப்பு

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சீபுரம் மாவட்டத்தில், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் துறை மற்றும் பல்வேறு துறைகளின் மூலமாக மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க போதிய உபகரணங்கள் மற்றும் உயிர் காக்கும் கருவிகளை இருப்பு வைக்க அறிவுரை வழங்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிக்கு தேவைப்படும் எந்திரங்கள் மற்றும் உபகரணங்களான ஜெனரேட்டர், மரம் அறுக்கும் எந்திரம், மணல் மூட்டைகள், சவுக்கு கம்புகள், மின் கம்பங்கள், ஆம்புலன்ஸ், பொக்லைன் எந்திரம், ரப்பர் படகுகள் மற்றும் மிதவைப்படகுகள் மற்றும் டார்ச் லைட் போன்றவற்றை போதுமான அளவில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்