வேறு எந்தக் குறையும் இல்லை, எனது மகள்தான் போய்விட்டாள்: பிரியாவின் தந்தை உருக்கம்

என் குழந்தை இறந்த பிறகு, தமிழக அரசு நிறைய உதவிகள் செய்துள்ளது. வேறு எந்த குறையும் இல்லை. என் குழந்தைதான் போய்விட்டாள் என்று கால்பந்து ஆட்ட வீராங்கனை பிரியாவின் தந்தை உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-17 07:57 GMT

சென்னை,

சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சையால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இறந்தார். இறந்த மாணவி பிரியாவின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்ற தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரியாவின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், ரூ.10 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலை, பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலைக்கான ஆணை, வீடு ஆகியவற்றை வழங்கினார்.

இதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாணவி பிரியாவின் தந்தை ரவிக்குமார் கூறுகையில்: "என் மகள் பிரியா இறந்துவிட்டாள். முதல் அமைச்சர் என்னிடம், நம்ம பிரியாவை போல நிறைய குழந்தைகள் உள்ளனர். அந்த குழந்தைகளுக்கு உங்களால் முடிந்த அளவுக்கு ஒரு காலணியையோ, மற்ற உபகரணங்களையோ வாங்கிக் கொடுங்கள். பிரியாவின் ஆத்மா சாந்தி அடையும் என்று கூறினார். என் குழந்தை இறந்த பிறகு, தமிழக அரசு நிறைய உதவிகள் செய்துள்ளது. வேறு எந்த குறையும் இல்லை. என் குழந்தைதான் போய்விட்டாள். அதுதான் எங்களது வருத்தம்" என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்