பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை - காவல்துறை விளக்கம்

மதுபோதையின் காரணமாக முரளிகிருஷ்ணன் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-11-10 12:04 GMT

சென்னை,

சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் அமைந்துள்ள வீரபத்ர சுவாமி கோவில் கருவறைக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக முரளிகிருஷ்ணன் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில், கைது செய்யப்பட்ட முரளிகிருஷ்ணன் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளதாகவும், இவர் வீரபத்ர சுவாமி கோவிலுக்கு நீண்ட காலமாக வந்து செல்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.45 மணியளவில் முரளிகிருஷ்ணன் குடிபோதையில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை எடுத்துக்கொண்டு கோவிலுக்குள் சென்று வீசியுள்ளார் எனவும், உடனடியாக அவர் பிடிக்கப்பட்டு விசாரணைக்காக கொத்தவால்சாவடி காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார் எனவும் கூறப்பட்டுள்ளது.

அவர் மீது வெடி மருந்துப் பொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அதிகமான மதுபோதையின் காரணமாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் எனவும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்