நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியாக நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. நேற்று பெய்த திடீர் மழையால் காயவைத்த கருவாடுகள் நனைந்தன.

Update: 2023-01-30 18:45 GMT

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியாக நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. நேற்று பெய்த திடீர் மழையால் காயவைத்த கருவாடுகள் நனைந்தன.

சுட்டெரித்த வெயில்

நாகையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. பகலில் வெயில் வெளுத்து வாங்கிய அதே நேரத்தில் மாலையில் தொடங்கி மறுநாள் காலை வெகுநேரம் வரையில் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. இதனால் இரவு நேரங்களில் குளிர் வாட்டி வந்தது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று மதியம் தாழ்வு மண்டலமாக மாறியது.

1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதி நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், நிலை கொண்டது.

இதன் காரணமாக லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலையில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த மண்டலம் காரணமாக நாகை துறைமுக அலுவலகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

காய வைத்த கருவாடுகள் நனைந்தன

நாகையில் நேற்று அதிகாலை லேசான மழை பெய்தது. இந்த மழையானது நாகூர், செல்லூர், பாலையூர், பாப்பாக்கோவில் என நாகையை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக பெய்தது.

இதனால் நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை சற்று சுணங்கியது. அதேபோல இந்த திடீர் மழை காரணமாக மீன்பிடி துறைமுகத்தில் காய வைக்கப்பட்டிருந்த கருவாடுகள் நனைந்தன. இதனால் கருவாடு தொழிலாளர்கள் வேதனை அடைந்தனர்.

விவசாயிகள் அதிர்ச்சி

நாகையில் தற்போது சம்பா நெல் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு நாகை மாவட்டத்தில் நெற்பயிர் நல்ல விளைச்சல் கண்டுள்ளது. நாகையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்ததால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை சாலையில் கொட்டி காயவைத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று எதிர்பாராமல் பெய்த இந்த மழையால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து பெரிய தார்ப்பாய் கொண்டு காய வைத்த நெல்லை மூடினர். அறுவடை நேரத்தில் எதிர்பாராமல் பெய்த இந்த மழை காரணமாக விவசாயிகள் வேதனை அடைந்தனர். இந்த மழையானது தொடர்ந்து பெய்தால், அறுவடை பணிகள் பாதிக்கப்படும் என்றும், இதனால் நஷ்டமே மிஞ்சும் என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்