நிலஎடுப்பு பணியில் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்கஎன்.எல்.சி. நிர்வாகம் மக்கள் குறைத்தீர்க்கும் மையம் அமைக்கப்படும்அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு

நிலஎடுப்பு பணியில் மக்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க என்.எல்.சி. நிர்வாகம் மக்கள் குறைத்தீர்க்கும் மையம் விரைவில் அமைக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Update: 2023-01-06 21:21 GMT


வடலூர், 

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கத்தாழை, கரிவெட்டி, வளையமாதேவி மேல்பாதி, வளையமாதேவி கீழ்பாதி மற்றும் ஊ.ஆதனூர் ஆகிய கிராமங்களில் உள்ள 548 நில உரிமையாளர்கள் புதிய இழப்பீட்டு தொகை பெற்று நிலத்தை ஒப்படைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுவரை 284 நில உரிமையாளர்களுக்கு ரூ.15.76 கோடி வழங்கி 86.32 ஹெக்டேர் நிலங்கள் கடந்த ஒரு மாதத்தில் பெறப்பட்டுள்ளது.

இதை மேலும் விரைவுபடுத்துவதற்காகவும், நில உரிமையாளர்கள் அறிந்திடும் வகையிலும் அனைத்து கட்சி நிர்வாகிகளை அழைத்து நில எடுப்பு பணிகளை தொடர்வது சம்பந்தமாக வடலூரில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். கலெக்டர் பாலசுப்பிரமணியம், எம்.எல்.ஏ.க்கள் சபா.ராஜேந்திரன், அய்யப்பன், அருண்மொழிதேவன், ராதாகிருஷ்ணன், சிந்தனைசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஏக்கருக்கு ரூ.72 லட்சம்

பின்னர் அமைச்சர் சி.வெ.கணேசன் கூறுகையில், அரசு தலையீட்டின் காரணமாக என்.எல்.சி.க்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு உயர்த்தப்பட்ட சரியீட்டுத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது குறித்து விளக்கி கூறினார்.

அதனை தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்த உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச தொகை ஒரு ஏக்கர் நிலம் மற்றும் வீடு கொடுத்த உரிமையாளர்களுக்கு சுமார் ரூ.72 லட்சம் வரை, அதாவது நில மதிப்பு, வேலைவாய்ப்புக்கான ஒரு முறை பணப்பலன், வீட்டின் மதிப்புத் தொகை, இதர மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்கான பணப்பலன் உள்ளிட்டவை சேர்த்து ஒட்டுமொத்த பணப்பலன்களாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.15 லட்சம் என முன்பு நிர்ணயம் செய்யப்பட்டப்படி தற்போது தமிழ்நாடு அரசு ஒரு ஏக்கருக்கு ரூ.25 லட்சம் என நிர்ணயம் செய்து வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி இதுவரை கூடுதல் இழப்பீடு கேட்டு விண்ணப்பித்த கத்தாழை, கரிவெட்டி, வளையமாதேவி கீழ்பாதி, வளையமாதேவி மேல்பாதி ஆகிய கிராமங்களில் 548 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 280 பேருக்கு ரூ.15.68 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

நிரந்தர வேலை

நிலஎடுப்பு பணி குறித்து மக்கள் குறைகளை கேட்டு நடவடிக்கை மேற்கொள்வதற்காக என்.எல்.சி நிர்வாகம் மக்கள் குறைத்தீர்க்கும் மையம் ஒன்று தனியாக அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நில எடுப்பு பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த மாவட்டத்திற்கு மட்டும் சமூகம் பொறுப்புணர்வுக்கான நடவடிக்கைகளுக்கு என்.எல்.சி. நிர்வாகத்திடமிருந்து ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் நிலம் கொடுத்த உரிமையாளர்களின் குடும்பத்தில் ஒருவர் என்ற நியதியில் 1000 பேருக்கு ஒப்பந்த முறைப்பணிகள் வழங்கப்படும். இதுதவிர மேற்கொண்டு நிலம் கொடுக்கும் உரிமையாளர்களின் குடும்பத்திலுள்ள படித்த இளைஞர்களுக்கு தொழிற்கல்விக்கான பயிற்சிகள் மூன்று ஆண்டுகள் வழங்கி சுமார் 500 நபர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு அடுத்த நான்கு ஆண்டுகளில் வழங்க வழிவகை செய்யப்படும்.

போனஸ் மதிப்பெண்

நிரந்தர வேலைவாய்ப்பு தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட 192 பணிகளுக்கான வேலைவாய்ப்பிலும், தற்போது வெளியிடப்படவிருக்கும் 150 பணிகளுக்கான வேலைவாய்ப்பில் நிலம் வழங்கிய உரிமையாளர்களின் குடும்பத்தில் டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு 20 போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது. இதன் மூலமாக நிலம் கொடுத்த உரிமையாளர்கள் பெரும்பாலானோர் நிரந்தர வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதில் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ. எம்.பி.எஸ். சிவசுப்பிரமணியம், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் செந்தில்நாதன், திலகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர்கள் மாதவன், ஆறுமுகம், ரமேஷ் பாபு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு தலைவர் மணிவாசகம், பா.ம.க. மாநில துணைத் தலைவர் ரவிச்சந்திரன், வி.சி.க. மாவட்ட செயலாளர்கள் பாலஅறவாழி, முல்லைவேந்தன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் என்.ராமலிங்கம், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஷேக் தாவூத், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் உமாநாத் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகள், அனைத்து கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்