கடலூர் மாவட்டத்தில் இருந்து என்.எல்.சி. நிறுவனம் வெளியேறும் வரை பா.ம.க. போராடும்

கடலூர் மாவட்டத்தில் இருந்து என்.எல்.சி. நிறுவனம் வெளியேறும் வரை பா.ம.க. போராடும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.

Update: 2023-03-07 18:47 GMT

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

என்.எல்.சி. எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு சுரங்கங்கள் அமைப்பதற்காக கடலூர் மாவட்ட மக்களின் நிலங்களை கடலூர் மாவட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்தி பறித்திருக்கும் நிலையில், தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விட்டதாகவும், இனி நிலங்களை கையகப்படுத்தப்போவதில்லை என்றும் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். இது அப்பட்டமான பொய்யாகும்.

விவசாயிகளுக்கு சொந்தமான அந்த நிலங்கள் பசுமை பூமியாகவே தொடர வேண்டும்; அங்கு விவசாயம் மட்டுமே நீடிக்க வேண்டும். மாறாக, சுற்றுச்சூழலை கெடுக்கும் கருமை பூமியாக மாற்ற பா.ம.க. அனுமதிக்காது. அதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய பா.ம.க. தயாராக உள்ளது. கடலூர் மாவட்ட மக்களின் நலனில் தமிழக அரசுக்கு உண்மையான அக்கறை இருந்தால், ஜெயங்கொண்டத்தில் நிலக்கரி சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் எவ்வாறு மீண்டும் உழவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனவோ, அதேபோல் இப்போது கையகப்படுத்தப்பட்டு இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வராத நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடமே கடலூர் மாவட்ட நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும்.

கடலூர் மாவட்டத்தை பாழ்படுத்தி வரும் என்.எல்.சி. நிறுவனம் கடலூர் மாவட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும். விவசாயிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் அவர்களிடமே மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த இலக்குகளை எட்டும் வரை பா.ம.க. எந்த சமரசமும் இல்லாமல் தொடர்ந்து போராடும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்