என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து பா.ம.க.வினர் திடீர் மறியல்

விருத்தாசலம், பண்ருட்டி மற்றும் ஸ்ரீமுஷ்ணத்தில் என்.எல்.சி.நிர்வாகத்தை கண்டித்து பா.ம.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-26 19:40 GMT

விருத்தாசலம்,

விருத்தாசலம் பஸ் நிலையத்தில்...

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் நிலம் எடுப்பதை கண்டித்து போராட முயன்ற பா.ம.க.வினரை கைது செய்ததை கண்டித்தும், தொடர்ந்து நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு, மாற்று இடம், வேலை வாய்ப்பு வழங்காமல் பொதுமக்களுக்கு விரோதமாக செயல்படும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும், என்.எல்.சி.யை மாவட்டத்தை விட்டு வெளியேற்ற கோரியும் பா.ம.க. கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆசா வெங்கடேசன், நகர செயலாளர்கள் முருகன், மணிமாறன், மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் சிலம்புச்செல்வி ஆகியோர் முன்னிலையில் கட்சியினர் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில் ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், மாவட்ட அமைப்பு செயலாளர் ஆர்.பி.பி. ராஜ், மாவட்ட தலைவர் கருணாநிதி, துணை தலைவர் பிரபு, மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர் எம்.ஆர்.மணிகண்டன், பசுமைத்தாயகம் மாவட்ட செயலாளர் சசிகுமார், வக்கீல்கள் சிவசங்கர், ராஜ.தனபாண்டியன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், பா.ம.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு என்.எல்.சி.நிர்வாகத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

போலீசார் பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து மறியலை கைவிட்ட பா.ம.க.வினர் அங்கிருந்து கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக புறப்பட்டு பாலக்கரைக்கு வந்தனர்.

அப்போது கடலூர் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பா.ம.க. இளைஞர்கள் சிலர் சாலையில் டயரை போட்டு தீ வைத்து கொளுத்தினர். அப்போது தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அங்கே வாகனங்களை நிறுத்தி இருந்த வாகன ஓட்டிகள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பண்ருட்டி

இதேபோல் கடலூர் வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் கோ.ஜெகன், தலைவர் டாக்டர்.நவீன் பிரதாப் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து நகர செயலாளர் ஆனந்தன் தலைமையில் பண்ருட்டி 4 முனை சந்திப்பில் கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் நந்தல், மாவட்ட நிர்வாகி சுபா.கதிரவன், வன்னியர் சங்க முன்னாள் செயலாளர் குபேரன், நகர தலைவர் ஜெயவீரன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் நத்தம் மூர்த்தி, மாவட்ட துணை தலைவர் தாமரைக்கண்ணன், ஒன்றிய செயலாளர் அறிவழகன், தேர்தல் பணிக்குழு செயலாளர் ராமலிங்கம் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த பண்ருட்டி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 19 பேரை கைது செய்தனர்.

ஸ்ரீமுஷ்ணம்

என்.எல்.சி.நிர்வாகத்தை கண்டித்து ஸ்ரீமுஷ்ணம் கடைவீதி காமராஜ் சிலை அருகில் பா.ம.க.வினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒன்றிய செயலாளர் செல்வ.அருளாளன், நகர செயலாளர் இளையராஜா, மாநில இளம்பெண்கள் பாசறை செம்பாயி, நகர தலைவர் மணிவேல், அமைப்பு செயலாளர் ராமு, துரை.சிவராமன், இளம்புயல், வெற்றி, அறிவு, சிவசூரியன், சதீஷ், சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனால் அங்கு சுமார் அரை மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்