பக்தர்கள் வசதிக்காக இரவு நேர பஸ் வசதி

திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்பத்திருவிழா இன்று தொடங்குவதையொட்டி பக்தர்கள் வசதிக்காக இரவு நேர பஸ் வசதி செய்யப்பட்டுள்ளதாக பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2022-05-19 18:38 GMT

திருவாரூர்:

தெப்பத் திருவிழா

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்கிறது. இந்த கோவிலின் ஆழித்தேர், ஆசியாவிலே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது. அதனுடன் மற்றொரு சிறப்பு குளமே ஆலயமாக கொண்ட கமலாலய குளத்தில் நடைபெறும் தெப்ப திருவிழாவாகும். இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.

இரவுநேர பஸ் வசதி

இந்தநிலையில், தியாகராஜர் கோவில் தெப்பத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் பாலச்சந்திரன் முன்னிலை வகித்தார். திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி.கே.கலைவாணன் தலைமை தாங்கினார்.

அப்போது எம்.எல்.ஏ. கூறியதாவது:-

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் தெப்பத் திருவிழா நடக்கிறது. தினமும் 3 முறை குளத்தை தெப்பம் வலம் வரும். இதனால், பக்தர்களின் நலன்கருதி போலீஸ் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுமார் 600 பேர் அமர்ந்து செல்லும் வசதியுடைய தெப்பத்தில், பாதுகாப்பு கருதி 300 பேர் வரை அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெப்ப திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வசதிக்காக இரவு நேர பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தடையின்றி மின்சாரம்

திருவாரூர் நகராட்சி சார்பில் தூய்மை பணிகள், குடிநீர் வசதிகள் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறை நீச்சல் வீரர்கள் தனியாக ஒரு படகில் தெப்பத்தை பின் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர், மேலும் 4 கரைகளிலும் பாதுகாப்பு ரோந்து பணியிலும் ஈடுபடுவார்கள்.மின்சாரத்துறை சார்பில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், மருத்துவத்துறை சார்பில் சிறப்பு மருத்துவக்குழு மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் வைக்கப்படும். தெப்ப திருவிழாவினை சிறப்பாக நடத்திட அனைத்து துறையினரும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நகரசபை தலைவர் புவனப்பிரியா, நகர் மன்ற உறுப்பினர் பிரகாஷ், அறநிலைத்துறை உதவி ஆணையர், ராணி, பரம்பரை அறங்காவலர் தியாகராஜன், செயல் அலுவலர் கவிதா, துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன், நகராட்சி ஆணையர் பிரபாகரன், மின்வாரிய செயற்பொறியாளர் செந்தமிழ்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்