கம்பத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை; பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி கைது

கம்பத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகியை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டனர்.;

Update:2022-09-22 23:35 IST

கம்பத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகியை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டனர்.

என்.ஐ.ஏ. அதிகாரிகள்

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் சட்ட விரோத செயல்களில் ஈடுபட இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்ததாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 3 பேரை நிஜமாபாத் போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கை தேசிய புலனாய்வு துறை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளிடம் நிஜாமாபாத் போலீசார் ஒப்படைத்தனர்.

இதையடுத்து கடந்த 18-ந்தேதி பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்ததாக ஆந்திரா, தெலுங்கானாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளுக்கு சொந்தமான 23 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பி.எப்.ஐ. நிர்வாகி கைது

அதன்தொடர்ச்சியாக நேற்று நள்ளிரவு தமிழகத்தில் 14 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதன்படி, தேனி மாவட்டம் கம்பத்தில் வசிக்கும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மதுரை மண்டல செயலாளர் யாசர் அராபத் வீட்டில் தேசிய புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு சுனில் தலைமையிலான என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் ஆர்.ஏ.எப். மத்திய போலீசார் நேற்று அதிகாலை 3 மணி அளவில் சோதனை நடத்தினர்.

பின்னர் யாசர் அராபத்தை அதிகாரிகள் கைது செய்து, கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதேபோல் தேனி முத்துதேவன்பட்டியில் உள்ள அரபிக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கல்லூரியில் இருந்த கணினி ஹார்டு டிஸ்க், துண்டு பிரசுரங்கள் மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றினர்.

ஆர்ப்பாட்டம்-பரபரப்பு

இதற்கிடையே கம்பம் முஸ்லிம் கூட்டமைப்பினர் நேற்று காலை வடக்கு போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி யாசர் அராபத்தை கைது செய்ததை கண்டித்தும், என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் அமைப்பினர் 41 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் வாகனத்தில் ஏற்றி, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் கம்பத்தில் பெரும் பரப்பு ஏற்பட்டது.

இதேபோல் கம்பம், பெரியகுளம், தேனியில் முஸ்லிம் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்