திருச்சியில் நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டம்

திருச்சியில் நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது.

Update: 2022-12-31 20:16 GMT

புத்தாண்டு பிறந்தது

2022-ம் ஆண்டு முடிந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2023-ம் ஆண்டு பிறந்தது. ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, திருச்சி மாநகர பகுதியில் நேற்று இரவு முதலே கொண்டாட்டம் களை கட்டியது. புத்தாண்டை வரவேற்கும் வகையில் இரவில் திருச்சி மத்திய பஸ் நிலையம், திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் மற்றும் பெரியகடை வீதி, என்.எஸ்.பி.சாலை, தில்லை நகர் மெயின்ரோடு பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. சில நட்சத்திர விடுதிகளில் இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்ததோடு, புத்தாண்டு வாழ்த்துகள் என வாழ்த்து கோஷம் எழுப்பினர்.

கண்கவர் வாணவேடிக்கை

மேலும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் இளைஞர்கள் பலர் நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். மேலும் சாலைகளில் செல்வோரிடம் இளைஞர்கள் புத்தாண்டு வாழ்த்துகள் கூற, பதிலுக்கு அவர்களும் வாழ்த்து கூறி அன்பை வெளிப்படுத்தினர்.

சில இடங்களில் இளைஞர்கள் பட்டாசு வெடித்தனர். கண்கவர் வாணவேடிக்கைகளும் நடைபெற்றது. சமூக வலைத்தளங்களான முகநூல், டுவிட்டர், வாட்ஸ்-அப், எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். மூலமும் புத்தாண்டு வாழ்த்துகளை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிமாறிக்கொண்டனர்.

மதுக்கடைகளில் கூட்டம்

புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே, மது அருந்துவது என்ற சூழலுக்கு பலர் மாறிவிட்டனர். இதனால், நேற்று திருச்சி மாநகரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. இரவு 10 மணிக்கு முன்பே டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகள் கூறிக்கொண்டனர். மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இளைஞர்கள் வரம்பு மீறாமல் கண்காணிக்கும் வகையில் மாநகர் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அத்துமீறி சென்ற இளைஞர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். மேலும் மாநகர் முழுவதும் உள்ள கேக் கடைகளில் கேக் மற்றும் இனிப்பு வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதில் தங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிப்புகள் மற்றும் கேக் வழங்கி வாழ்த்துகளை பறிமாறிக்கொண்டனர்.

சிறப்பு பிரார்த்தனை

திருச்சி மேலப்புதூர் தூய மரியன்னை ஆலயம், புத்தூர் பாத்திமா ஆலயம், பசிலிக்கா ஆலயம், அரிஸ்டோ ரவுண்டானா யோவான் ஆலயம், கருமண்டபம் ஆரோக்கியமாதா, சந்தியாகப்பர் ஆலயம், மெயின் கார்டு கேட் ஜோசப் கல்லூரியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்தது. புத்தாண்டை வரவேற்று கிறிஸ்தவ பாடல்கள் பாடப்பட்டன. இன்று காலையும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.

கோவில்களில் சிறப்பு தரிசனம்

மேலும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில், ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில், மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில், கண்டோன்மெண்ட் அய்யப்பன் கோவில், ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், மேக்குடி ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இன்று காலை முதல் சிறப்பு வழிபாடு, அர்ச்சனை நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்