புதிய வகை கொரோனா பரவல்: மக்கள் முககவசம் அணிவதில் அலட்சியம் காட்டக்கூடாது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

புதிய வகை கொரோனா பரவலை எதிர்கொள்ள அனைத்து வகையிலும் தயாராவோம். பொதுமக்கள் முககவசம் அணிவதில் அலட்சியம் காட்டக்கூடாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2022-12-25 22:43 GMT

புதிய வகை கொரோனா

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மூதறிஞர் ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நேற்று நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

உலகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா பி.எப்.7 தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சீனா, தென்கொரியா, தைவான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் அதன் பாதிப்பு பதிவாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பி.எப்.7 கொரோனா பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு அறிவுறுத்தும் முன்னரே, கடந்த 2 நாட்களுக்கு முன்பு தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இருக்கும் ஆக்சிஜன் கையிருப்பு, படுக்கை வசதிகள், கொரோனா பாதிப்பை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அந்த வகையில் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் இருக்கும் பன்னாட்டு விமான நிலையங்களான சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களில் பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

சவாலை எதிர்கொள்வோம்

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த 15 நாட்களாக ஒற்றை இலக்கத்தில் தான் இருக்கிறது. எனினும் மக்கள் அலட்சியம் கொள்ளாமல் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் முககவசம் அணிவது பாதுகாப்பாகும். மேலும் குறிப்பிட்ட ஒரு இடத்தில் தொற்று பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரிக்கும் போது மரபணு பரிசோதனை செய்ய மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருக்கிறது. அதன்படி இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே கொரோனா தொற்றுக்கு மரபணு பரிசோதனை செய்யும் மையம் தமிழகத்தில் தான் உள்ளது.

அதேபோல் தமிழகத்தில் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம்களின் மூலம் 90 சதவீத மக்கள் ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர். எனவே தமிழக அரசு எந்தவித சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்