குப்பையில் கொட்டப்படும் பூக்களை மறுசுழற்சி செய்து உரம் தயாரிக்கும் பசுமை ஆலய திட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கோவில்களில் குப்பையில் கொட்டப்படும் பூக்களை மறுசுழற்சி செய்து உரம் தயாரிக்கும் பசுமை ஆலய திட்டத்தை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-08-03 16:58 GMT

மயிலாடுதுறை மாவட்ட கோவில்களில் குப்பையில் கொட்டப்படும் பூக்களை மறுசுழற்சி செய்து உரம் தயாரிக்கும் பசுமை ஆலய திட்டத்தை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் தொடங்கி வைத்தார்.

பசுமை ஆலய திட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதன்முறையாக இந்துசமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் குப்பைகளில் கொட்டப்படும் பூக்களை திடக்கழிவு மேலாண்மை முறையில் மறுசுழற்சி செய்து உரம் தயாரிக்கும் பசுமை ஆலய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு உள்ள சித்தர்காடு சம்பந்தர் கோவில் வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் கலந்து கொண்டு பசுமை ஆலய திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பணியாற்றும் செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பசுமை கழிவுகளான பூக்கள், இலைகள், உணவு பொருட்கள் மற்றும் பழங்களை குப்பை தொட்டியில் சேகரித்து உரமாக்குவதற்கான பயிற்சி பட்டறை வகுப்பு எல்.இ.டி. ஒளித்திரை மூலம் ஒளிபரப்பப்பட்டது.

பயிற்சி

இதில், மக்கும் கழிவுகள், பூக்கள், மலர் மாலை, அன்னதான கழிவுகளை இயற்கை முறையில் உரமாக்கி நந்தவனங்களுக்கு பயன்படுத்துவது குறித்தும், கோசாலையில் உள்ள மாட்டு சாணத்தில் இருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கப்பட்டு, அன்னதான கூடத்துக்கு வழங்குவது குறித்தும் ஐ.டி.சி. திட்ட ஒருங்கிணைப்பாளர் சுகந்தர் பயிற்சி அளித்தார்.

கோவிலுக்கு தேவையான குப்பைகளை உரமாக்கும் பொருட்களை கோவில் உழவாரப்பணி மன்ற தலைவர் அம்பலவாணன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையர் முத்துராமன், மயிலாடுதுறை மாவட்டத்தில் பசுமை ஆலய திட்டத்தை செயல்படுத்தும் அவ்வை கிராம நலசங்க தொண்டு நிறுவன செயலாளர் கிருஷ்ணகுமார், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிவராமன், அருட்செல்வன், அசோக், ராஜசேகர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்