சிறு, குறு விவசாயிகள் புதிய மின்மோட்டார் பம்பு செட்டு மானியத்தில் அமைக்க விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் புதிய மின்மோட்டார் பம்பு செட்டு மானியத்தில் அமைக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் புதிய மின்மோட்டார் பம்பு செட்டு மானியத்தில் அமைக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிறு, குறு விவசாயிகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வழங்கும் திட்டம் மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு பாசன நீரை இறைத்திட புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்பு செட்டுகளை மாற்றி புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் பொருத்தவும் இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது.
விவசாயிகள் பயன் பெறும் வண்ணம் ஒரு மின் மோட்டார் பம்பு செட்டுக்கு 50 சதவீதம் மானியமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். இதன்படி நடப்பு 2023-24 ஆம் நிதி ஆண்டில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பொதுக்கூறு விவசாயிகளுக்கு 100 எண்ணிக்கையில் மற்றும் சிறப்பு கூறு விவசாயிகளுக்கு 20 எண்ணிக்கையில் என மொத்தம் 120 எண்ணிக்கையில் ரூ.18 லட்சம் அரசு மானியத்தில் புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள், திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்பு செட்டுகளை மாற்றி புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அரசாணை பெறப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கலாம்
எனவே இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, துரைக்கண்ணு நகர், சித்தர்காடு, மயிலாடுதுறை என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் சிட்டா, சிறு-குறு விவசாயி சான்றிதழ், அடங்கல், கிணறு அமைந்துள்ள நிலவரைபடம், மின்சார இணைப்பு அட்டை விவரம் மற்றும் வங்கி புத்தகத்தின் முதல் பக்க நகலுடன் அணுகி விண்ணப்பித்து, சீனியாரிட்டி அடிப்படையில் பயன்பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு 9443277456 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.