புதிய கல்விக்கொள்கை துரோணர்களை நினைவுபடுத்துகிறது - அமைச்சர் அன்பில் மகேஷ்
புதிய கல்விக்கொள்கை துரோணாச்சாரியார்களை நினைவுபடுத்தும் விதமாக இருக்கிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
திருச்சி,
முதல்-அமைச்சரின் 'காலை உணவுத் திட்டம்' தமிழ்நாடு முழுவதும் 31,008 அரசு பள்ளிகளில் இன்று விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி திருவெறும்பூர் அருகே நவல்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இந்த திட்டத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு உணவுகளை பரிமாறி மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
புதிய தேசிய கல்விக்கொள்கை என்பது இன்றைக்கும் துரோணாச்சாரியார்களை நினைவுபடுத்தும் விதமாகவே இருக்கிறது. இது பழைய காலமல்ல. மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் விதமாக முதல்-அமைச்சர் பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறார்.
கல்வி என்பதை வெறும் கல்வியாக பார்க்க முடியாது. அது கலாச்சாரம், பண்பாடு என்பதோடு சேர்ந்து உள்ளது. அதை கருத்தில் கொண்டு நம்முடைய மாநிலத்திற்கு, மாணவர்களுக்கு என்ன தேவையோ அது குறித்த திட்டங்களை செயல்படுத்துவோம். இவ்வாறு கூறினார்.